இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. நீட் மதிப்பெண்களிலும் ஆட்சேபனை எழுப்பப்பட்டது. இந்த முறைகேடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 30-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.முறைகேடுகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும் நடந்தன. நாடாளுமன்றத்திலும் பிரச்சினை எழுப்பப்பட்டது. அதனால் மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது.
இருப்பினும், நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக்கோரிய மனுக்களை கடந்த மாதம் 23-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதற்கான விரிவான காரணங்களை பின்னர் தெரிவிப்பதாக கூறியது.திட்டமிட்டு புனிதத்தன்மை மீறப்படவில்லை அதன்படி, நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, தனது தீர்ப்புக்கான விரிவான காரணங்களை பட்டியலிட்டது.
நீதிபதிகள் கூறியதாவது:-நீட் தேர்வு வினாத்தாள், ஹசாரிபாக்கிலும், பாட்னாவிலும் கசிந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அங்கு நடந்த வினாத்தாள் கசிவில், 155 மாணவர்கள் ஆதாயம் அடைந்ததுபோல் தோன்றுவதாக சி பி ஐ விசாரணை அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஹசாரிபாக், பாட்னா ஆகிய இடங்களை தாண்டி, நீட் தேர்வின் புனிதத்தன்மை திட்டமிட்டு மீறப்படும் அளவுக்கு வினாத்தாள் கசிவு நடக்கவில்லை. எனவேதான், நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, தேர்வு சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக ‘இஸ்ரோ’ முன்னாள் இயக்குனர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
அந்த குழுவின் விசாரணை வரம்பை சுப்ரீம் கோர்ட்டு விரிவாக்கம் செய்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்பிறகு ஒரு மாதத்துக்குள் அவற்றின் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும்.
தேர்வு பாதுகாப்பு மட்டுமின்றி, தேசிய தேர்வு முகமையின் நிர்வாக நடைமுறை பற்றியும் மேற்கண்ட நிபுணர் குழு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். தேசிய தேர்வு முகமை தனது தவறுகளை தவிர்க்க வேண்டும். இந்த ஆண்டு காணப்பட்ட அந்த தவறுகள், மாணவர்களின் நலன்களுக்கு உதவாது.
தவறான வினாத்தாள் கொடுத்ததற்கான நேர இழப்புக்காக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது தவறு.ஒரே கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் இருப்பதாக கூறி, கருணை மதிப்பெண் வழங்கியதால் 44 மாணவர்கள், முழு மதிப்பெண் (720) பெற்ற சூழ்நிலை ஏற்பட்டது.தேர்வு மையத்தை மாற்ற மாணவர்களுக்கு அனுமதி அளித்தும், புதிய பதிவுகளை மேற்கொள்ள பின்வாசலை திறந்து விட்டும் தவறுகள் செய்தது.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தேர்வு முறைகளை வலுப்படுத்த வேண்டும். இணைய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். தேர்வு மையங்கள் ஒதுக்கும் முறையை மறுஆய்வு செய்ய வேண்டும்.
வினாத்தாள் கசிவை தடுக்க வினாத்தாள்களை அச்சிடுதல், அவற்றை சீல் வைத்து சேகரித்து வைத்தல் ஆகியவற்றுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். வினாத்தாள்களை திறந்த வாகனத்தில் கொண்டு செல்வதற்கு பதிலாக, பூட்டால் பூட்டி, மூடிய நிலையில் உள்ள வாகனங்களில் கொண்டு செல்வது பற்றி பரிசீலிக்க வேண்டும்.ஆள்மாறாட்டத்தை தடுக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். பல்வேறு கட்டங்களில் சோதனை நடத்தப்பட வேண்டும்.நாங்கள் அனைத்து குறைகளையும் தெரிவித்து விட்டோம். ராதாகிருஷ்ணன் குழு அவற்றை சரிசெய்ய வேண்டும்.நாங்கள் சொன்ன அனைத்தையும் அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அக்குழு வகுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||