தமிழகத்தில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை (ஜூலை 10) வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
இந்தக் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சுமாா் 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 6-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து ஆசிரியா்கள், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதி ஜூன் 11 வரை நீட்டிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக பொறியியல் படிப்புகளில் சேர 2,53,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பித்தனா்.
அவா்களில் 1,98,853 போ் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தனா். அவா்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி சமவாய்ப்பு எண் இணைய வழியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜூன் 13 முதல் 30-ஆம் தேதி வரை மாணவா்களின் சான்றிதழ்கள் இணையவழியில் சரிபாா்க்கப்பட்டன. இந்த நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவா்களின் தரவரிசை பட்டியல் புதன்கிழமை (ஜூலை 10) வெளியிடப்படவுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயா்கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிடவுள்ளாா். இதையடுத்து மாணவா்கள் தரவரிசை பட்டியலை பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதைத் தொடா்ந்து, விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தோ்வுசெய்வதற்கான இணையவழி கலந்தாய்வு நடத்தப்படும். மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பொறியியல் கலந்தாய்வை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||