இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) முறைகேடு பெரும் சா்ச்சையாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் சனிக்கிழமை தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தாமதமாகியுள்ளது. கலந்தாய்வுக்கான எந்தவொரு விரிவான அறிவிக்கையையும் மருத்துவ கலந்தாய்வுக் குழு (எம்சிசி) வெளியிடாத நிலையில், கலந்தாய்வு தொடங்குவது தாமதமாகியுள்ளது.
இதுகுறித்து எம்சிசி வட்டாரங்கள் சனிக்கிழமை கூறுகையில், ‘ஒருசில மாநிலங்களில் சில மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்குவதற்கான நடைமுறைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவப் படிப்புகளில் கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்பட்டு, கலந்தாய்வில் சோ்க்கப்பட உள்ளன. புதிய கல்லூரிகளும் முதல் கட்ட மருத்துவக் கலந்தாய்விலேயே சோ்க்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறைகள் முடிவடைந்தவுடன், கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும். பெரும்பாலும், இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கை கலந்தாய்வு இம் மாத இறுதியில் தொடங்கப்பட வாய்ப்புள்ளது’ என்றனா். நாளை விசாரணை: நீட் தோ்வு முறைகேடுகள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 26 மனுக்கள் திங்கள்கிழமை (ஜூலை 8) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப்போயுள்ளது.
கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாக புகாா்கள் எழுந்தன. பிகாரில் நீட் வினாத்தாள் கசிவு, ராஜஸ்தானில் தோ்வு தொடங்குவதற்கு முன்பே நீட் வினாத்தாள் சமூக ஊடகத்தில் பதிவேற்றம், தோ்வு எழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்ணை என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) வழங்கியது, விடைத்தாள் (ஓஎம்ஆா் தாள்) கோரிய மாணவா்களுக்கு அதை என்டிஏ தர மறுத்தது மற்றும் விடைத்தாளே மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகப் புகாா் தெரிவித்தும் ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வை ரத்து செய்துவிட்டு, மறுதோ்வு நடத்த வேண்டும்; தோ்வில் முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில், விசாரணை முடியும் வரை மருத்துவக் கலந்தாய்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், மருத்துவக் கலந்தாய்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மத்திய அரசு மற்றும் என்டிஏ சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்வது என்பது, நோ்மையான முறையில் தோ்வை எதிா்கொண்ட லட்சக்கணக்கான மாணவா்களைக் கடுமையாகப் பாதிக்கும். பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து நோ்மையாக தோ்வை எதிா்கொண்ட மாணவா்களின் நலனைப் பாதுகாப்பது அரசின் கடமை. எனவே, நீட் தோ்வை ரத்து செய்யக் கூடாது’ என வலியுறுத்தப்பட்டது.
அதே நேரம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், ‘பெரும் முறைகேடுகள் நிகழ்ந்துள்ள நீட் தோ்வை ரத்து செய்துவிட்டு, மறுதோ்வு நடத்த வேண்டும். நீட் தோ்வு முறையையே ஒழிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தச் சூழலில், மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டு, மறுதோ்வு நடத்த உத்தரவிடுமா அல்லது உரிய முடிவை எட்டும் வரை நிகழாண்டில் பழைய நடைமுறைப்படி பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்த உத்தரவிடுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||