அரசுப்பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் விடுப்பில் சென்றதால், மாணவர்கள் அங்கும் இங்குமாக விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஆய்வுக்கு சென்ற கள்ளக்குறிச்சி கல்வி அதிகாரி அதிர்ச்சி அடைந்ததோடு, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தார். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் கற்றல் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போதுள்ள வளர்ந்து வரும் கால சூழ்நிலைகளுக்கேற்ப திட்டமிட்டு, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
என்னதான் அரசு திட்டங்களை தீட்டி பள்ளிகளில் நடைமுறைக்கு கொண்டு வந்தாலும், அதனை செயல்படுத்துவது என்பது போர்ப் படை தளபதிகளான ஆசிரியர்களின் கையில்தான் அதன் வெற்றி அடங்கி இருக்கிறது. அரசும் அவர்களை நம்பிதான் மாணவர்களுக்கு பயன் அளிக்கக்கூடிய ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்துகிறது. அரசு மட்டுமல்ல, பெற்றோர்களும் ஆயிரம் கனவுகளுடன் தங்கள் பிள்ளைகளை ஆசிரியர்களை நம்பி ஒப்படைக்கிறார்கள். இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் ஆசிரியர்களா? இப்படி செய்வார்கள் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு கள்ளக்குறிச்சியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆய்வுக்கு சென்ற போதுதான் இந்த சம்பவம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அந்த பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்த சி.பெரியசாமி, பா.பொன்முடி ஆகிய இருவருக்கும் சமீபத்தில் நடந்த கலந்தாய்வில் இடமாறுதல் கிடைத்துள்ளது. அந்த புதிய பணியிடத்துக்கு சேருவதற்காக அவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் சென்றனர். அவர்களை வழியனுப்புவதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து சென்றிருக்கின்றனர்.
அதாவது, பள்ளியில் பணியாற்றும் 50 சதவீதம் ஆசிரியர்கள் பணியில் இல்லாமல் விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் மாணவர்கள் வகுப்பறையிலும், வளாகத்திலும் ஒழுங்கீனமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். இதனை ஆய்வுக்கு சென்ற முதன்மை கல்வி அலுவலர் பார்த்து பேரதிர்ச்சி அடைந்துள்ளார். ஆய்வு முடித்து அலுவலகம் திரும்பிய அந்த அதிகாரி, ‘உயர் அலுவலருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், பள்ளியின் மீதும், மாணவர்களின் நலன் மீதும் அக்கறை இல்லாமல் செயல்பட்ட தலைமை ஆசிரியர் பொ.வெங்கடேசனை தற்காலிகமாக பணியில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் அவர் உத்தரவு பிறப்பித்திருந்த கடிதத்தில், ஆய்வுக்கு சென்றபோது ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி இருந்த நிலையை கண்ட ஆதங்கத்தையும் கொட்டியிருந்தார். அதில், 'தலைமை ஆசிரியர் பொறுப்பில்லாமல் செயல்பட்டதால் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு கற்றல், கற்பித்தல் பணி நடைபெறாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பள்ளியில் உள்ளபோது மாணவர்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் செயல்பட்டது. அரசு பணியின் மீது பற்று இல்லாமல் செயல்பட்டது. தன் பொறுப்புகளையும், கடமைகளையும் மறந்து பள்ளிப்பணிக்கு குந்தகம் விளைவித்தது' என்பது போன்ற கடுஞ்சொற்களையும் பயன்படுத்தியிருந்தார்.
இவ்வளவு வசைபாடிய அதிகாரி, தற்காலிகமாக பணியில் இருந்து விடுப்பு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர், அவருக்கான பணியிடத்தை சென்னை பள்ளிக்கல்வி இயக்குனரை அணுகி பெற்றுக் கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் இந்த நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது. இதுஒரு பக்கம் என்றால், அதிகாரியின் இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘இதுபோன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள் மீதோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனரிடம் பரிந்துரைக்கலாம். ஆனால் இவரே நடவடிக்கையை எடுத்து இருப்பது, இதுவரை கேள்விப்படாத நடவடிக்கை' என்றனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||