நீட் தேர்வில் இரு மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், இயற்பியல் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வழங்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் செய்ய தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவு செய்துள்ளது.
பட்டதாரி மருத்துவக் கல்வி விதிமுறைகள் 2023 கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், எம்பிபிஎஸ் கவுன்சலிங்கில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண் அல்லது சதவீதம் எடுத்திருந்தால், அவர்கள் உயிரியல் பாடப்பிரிவில் எடுத்த மதிப்பெண் ஒப்பிட்டு பார்க்கப்படும்.
அதுவும் ஒரே மாதிரியாக இருந்தால், வேதியியல், அதைத் தொடர்ந்து இயற்பியல் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். இவைகளும் ஒரே மாதிரியாக இருந்தால், மூத்த வயதுடையவருக்கு தரவரிசையில் முன்னுரிமை தரப்படும். இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இயற்பியல் பாட மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை தர தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது. இயற்பியல், வேதியியல், கடைசியாக உயிரியல் என்ற வரிசையில் மதிப்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தரவரிசை நிர்ணயிக்கப்பட உள்ளது. இதிலும் தீர்வு காணப்படவில்லை எனில், கணினி மூலம் குலுக்கல் நடத்தப்பட்டு தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாம் ஆண்டுக்கு 4 வாய்ப்பு மட்டுமே
புதிய விதிமுறைகளின்படி, எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் சேர்க்கை தேதியிலிருந்து 9 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். அதே நேரத்தில் முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற 4 வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எந்தச் சூழலிலும் முதலாம் ஆண்டு படிப்பை முடிக்க 4க்கு மேல் வாய்ப்புகள் வழங்கப்படாது என தேசிய மருத்துவ ஆணைய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. மேலும், மெரிட் பட்டியலின் அடிப்படையிலேயே நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கு பொதுவான கவுன்சலிங் இருக்கும் என்றும் என்எம்சி கூறி உள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||