மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை பின்பற்றாதது ஏன்? என்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பியது.
தமிழ்நாடு சிறப்பு பள்ளிகள் கவுன்சில் அமைப்பின் செயலாளர் வெற்றிவேல் முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அறிவுசார் குறைபாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலன் கருதி சிறப்பு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பல அர்ப்பணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான ஊதியம் மிக மிக குறைவு.
மற்ற ஆசிரியர்களைப் போல அவர்களுக்கும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய உரிய சம்பளத்தை வழங்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். இதுவரை அதுதொடர்பான எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே, சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களை போல சலுகைகளுடன் கூடிய சம்பளத்தை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் வக்கீல் கு.சாமிதுரை ஆஜராகி, “தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளனர். 8 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கின்றன. இந்த விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை” என்று வாதாடினார்.
இதனையடுத்து “இது மிக முக்கிய வழக்குகளில் ஒன்று. கடந்த 2016-ம் ஆண்டில் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஏன் முறையாக பின்பற்றவில்லை?சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறப்பு பள்ளிகள் எத்தனை உள்ளன, அவற்றில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன? சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்ற ஆசிரியர்களைப் போல ஊதிய நடைமுறைகள் வழங்குவது குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
பின்னர் இதுகுறித்து தமிழக அரசு உரிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||