என்ஜினீயரிங் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், 4-வது சுற்று நிறைவு பெற இருக்கிறது. இந்த நிலையில் முதல் கட்ட கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பி.இ., பி.டெக். (முழு நேரம்) படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதல் செமஸ்டருக்கான அறிமுக வகுப்புகள் வருகிற 14-ந்தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் வருகிற 28-ந்தேதியும் தொடங்குகிறது. இந்த செமஸ்டருக்கான கடைசி வேலைநாள் அடுத்த ஆண்டு (2023) மார்ச் 23-ந்தேதி ஆகும்.
அதேபோல் பி.ஆர்க். (முழு நேரம்) படிப்பில் சேர்ந்தவர்களுக்கு அறிமுக வகுப்புகள் 14-ந்தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் 28-ந்தேதியும் தொடங்கும் என்றும், இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி கடைசி வேலைநாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் செய்முறை தேர்வும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி முதல் செமஸ்டர் தேர்வும் தொடங்கி நடைபெறும். முதல் செமஸ்டர் முடிந்து, அதற்கு அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 15 நாட்கள் நடக்கும் அறிமுக வகுப்புகளில், மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறை, கல்லூரி குறித்தும், படிப்புக்கு பின்னர் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள், தொழில் முனைவோராவதற்கான வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||