பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நடந்த 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் அறிவிப்புக்குரிய தகுதியை பல்வேறு வகையில் பெறவில்லை எனக்கூறி, 152 பேருக்கும் அறக்கட்டளையை நிர்வகித்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் பிறப்பித்தார்.
மேலும், உதவி பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ஆர்.பிரேமலதா, எஸ்.சாந்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வக்கீல் ரவிச்சந்தர், சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வக்கீல் எம்.பழனிமுத்து, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சந்திரசேகர், எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் திலகவதி, வக்கீல்கள் எம்.ரவி, ஜி.சங்கரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும். இவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி, கல்லூரிக் கல்வி இயக்குனர், 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் பணி அனுபவத்துக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘தேர்வு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது. உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்த பதவிக்கான தேர்வும், அதை தொடர்ந்த நடந்த நியமனமும் செல்லாது” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||