மாநில கல்வி கொள்கைக்குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும், பாடத்திட்டங்களை குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, மாநிலத்துக்கென புதிய கல்வி கொள்கையை உருவாக்க திட்டமிட்டது. அதன்படி, 2021-22-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ‘எதிர்கால குறிக்கோளுக்கேற்ப மாநிலத்துக்கென தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்டக்குழுவை அரசு அமைக்கும்' என்று தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டார். அந்தக் குழுவும் அடிக்கடி ஆலோசனை நடத்தி மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் களம் இறங்கியிருக்கிறது.
மாநில கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டு, அதன் மூலமும் கருத்துகள் பெறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது 38 மாவட்டங்களை 10 மண்டலங்களாக பிரித்து பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் கேட்கும் பணியை கல்விக் கொள்கைக்குழு மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களை வரவழைத்து சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர்.
மாணவர்கள் தரப்பில், பாடத்திட்டங்கள் அதிகமாக இருப்பதாகவும், அதனை முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ஆசிரியர்கள் வேகமாக நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டியதோடு, பாடத்திட்டங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தொடர்ந்து பொதுத்தேர்வுகளை எழுதுகிறோம். இடையில் நடத்தப்படும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட முடியும். பாலியல் கல்வி தடைசெய்யப்பட்ட பாடமாக இருக்கிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதேபோல், பெற்றோர், கல்வியாளர்கள் தரப்பில் இருந்து, ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவந்து, கற்பிப்பதில் திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். 10 வயது வரை குழந்தைகள் தாய்மொழியில்தான் அவசியம் கற்கவேண்டும். 10 வயதுக்கு பிறகு 2-வது மொழியை அறிமுகப்படுத்தலாம் என்பது போன்ற கருத்துகளை பதிவு செய்தனர்.
ஆசிரியர்களை பொறுத்தவரையில், சம்பளத்தை மாதம் ரூ.2 லட்சமாக உயர்த்தவேண்டும். 3-ம் வகுப்பில் இருந்து அறநெறிக்கல்வியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கற்றலை மேம்படுத்த அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஒரு வகுப்பறைக்கு ஒரு ஆசிரியரை நியமிக்கவேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். குழந்தை திருமணங்கள், குழந்தை தொழிலாளர்களை தடுக்கும் கடுமையான சட்டங்களை மாநில அரசு கொண்டு வரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துகளை பரிந்துரைத்தனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||