குளறுபடிகளின் காரணமாக குறைந்த மதிப்பெண் கிடைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், நீட் தேர்வு விடைத்தாளை சரிபார்க்க மாணவிக்கு மதுரை ஐகோர்ட்டு அனுமதித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வை எழுதியிருந்தேன். அந்த தேர்வில் 200-ல் 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருந்தேன். ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதில் என்னுடைய விடைத்தாள் நகலின்படி, 720-க்கு 564 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கடந்த 7-ந்தேதி வெளியான முடிவுகளின்படி, எனக்கு 114 மதிப்பெண் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய விடைத்தாளின்படி சராசரியில் 48.8 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கிறேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இது எனக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே என்னுடைய நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாளை சரிபார்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். தேர்வு முடிவில் எனக்கு அளித்த மதிப்பெண்ணை ரத்து செய்து, சரியான மதிப்பெண் அடங்கிய பட்டியல் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகலில் முரண்பாடுகள் இருப்பதாக இந்த கோர்ட்டு கருதவில்லை. ஆனால் மனுதாரர் கூடுதல் கட்டணம் செலுத்தி மருத்துவ படிப்பில் சேர நேரிடும் என அவரது வக்கீல் கேட்டுக்கொண்டார். இதனால் மனுதாரர் தனது நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் மற்றும் கார்பன் நகலை சரிபார்க்க அனுமதிக்கிறேன்.
இதில் எந்த தவறோ, முறைகேடோ இல்லை என்று தெரியவந்தால் மனுதாரருக்கு கடுமையான அபராதம் விதிக்க நேரிடும். 2 வாரத்தில் இந்த நடைமுறையை முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||