உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பலர் உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்தனர். ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்ததால் அங்கிருந்த மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்.
உக்ரைனில் இன்னமும் அமைதி திரும்பாத நிலையில் இந்தியாவில் தங்களது மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்குமாறு அந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இதுதொடர்பாக பஞ்சாபை சேர்ந்த அர்ச்சிதா உள்ளிட்ட 7 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் மீண்டும் கடந்த 5-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவக்கல்வியை இந்தியாவில் நிறைவு செய்வது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் சாதகமான முடிவு எடுத்து உள்ளதாக தோன்றுகிறது’ என தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவ கல்வியை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடர இந்திய மருத்துவ கவுன்சில், தேசிய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் இடமில்லை. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை நாட்டிலுள்ள முதன்மையான மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர அனுமதித்தால் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்,மேலும் நாட்டில் மருத்துவக்கல்வியின் தரமும் குறையும். அதிகப்படியான கட்டணத்தை அவர்களால் செலுத்தவும் முடியாது.
இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்க உள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||