அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 955 உதவிப் பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு கல்லூரிகளில் பணியாற்றுகிற உதவிப் பேராசிரியர்கள் பணியை வரன்முறை செய்யும்படி கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களில் 955 உதவிப் பேராசிரியர்களின் பணி, கடந்த 2012-ம் ஆண்டில் இருந்தே நிரந்தரம் செய்யப்படாமலேயே இருந்தது. அவர்கள் பணியில் சேர்ந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பணி நிரந்தரம் செய்யப்படுகிறது.
2 ஆண்டுகள் அவர்கள் பணியை முடித்திருந்தாலே பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிடுவதே முறை. ஆனால் கடந்த ஆட்சியில் அதை செய்யாததினால் தற்போது அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகள் எப்போது முடிகிறதோ, அந்த நாளில் இருந்து முன்தேதியிட்டு பணிநிரந்தரம் செய்யப்படும்.
பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள 41 உறுப்புக் கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முந்தைய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் பணமும் ஒதுக்கவில்லை, அரசும் அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை. எனவே அந்த கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, 41 கல்லூரிகளும் அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டன. அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. இதனால் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊதியம் பெறாத கவுரவ விரிவுரையாளர்களுக்கு (கெஸ்ட் லெக்சரர்) ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பல கல்லூரிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது அனுமதிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணியில் 5 ஆயிரம் காலியிடங்கள் இருக்கின்றன. அவற்றில் 4 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இந்த 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் நியமிப்பதற்கான தேர்வை ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) விரைவில் நடத்த இருக்கிறது. அதற்கான அறிவிப்பு 10 நாட்களில் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் தேர்வு நடைபெற்று, உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கான நேர்முகத்தேர்வின்போது கவுரவ விரிவுரையாளர்களுக்கு சலுகை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பணியாற்றிய கால அளவுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.
பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிந்துவிட்டது. அவர்களுக்கான பணி ஆணைகளை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். மொத்தம் 1,030 பணி ஆணைகள் வழங்கப்படும்.
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் முதல் கட்டம் முடிந்திருக்கிறது. இந்த மாதம் 22-ந் தேதிவரை 14 ஆயிரத்து 524 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் 10 ஆயிரத்து 351 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில் முதல் விருப்பப் படிப்பில் 6,009 பேர் சேர்ந்து விட்டார்கள். முதல் விருப்பப் படிப்புக்கு பணம் செலுத்தி இடம் கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் அது விரைவில் முடிவு செய்யப்படும். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட கலந்தாய்வு தொடங்கும்.
அனைத்து கல்லூரிகளிலுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை முடிந்த பிறகும் காலியாக உள்ள இடங்களுக்கு ‘வராண்டா அட்மிஷன்’ அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படும்.
காலை உணவுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கும், தேசிய கல்விக் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு உணவு வழங்குவது நீதிக்கட்சி காலத்தில் இருந்தே செயல்பாட்டில் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் 3 மொழிகள் கட்டாயமாக்கப்படுகிறது. நானும் பல கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசும்போது, 2 மொழிகளை (தமிழ், ஆங்கிலம்) படிப்பதே கடினமாக உள்ளது என்றும் அதுவே போதுமானது என்றும் கருத்து தெரிவித்தனர். இல்லம் தேடி கல்வியும் முதல்-அமைச்சர் எடுத்துள்ள முடிவுதான்.
மாணவர்கள் எந்த வகையிலும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக காவல்துறை உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||