இலவச ரேஷன் திட்டம், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் அறிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மாதம்தோறும் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை/அரிசி இலவசமாக வழங்குகிற திட்டம், வெள்ளிக்கிழமை (நாளை) முடிகிறது. இந்த திட்டம் (மேலும் 3 மாதங்களுக்கு) டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
‘பிரதம மந்திரி காரிப் கல்யாண் அன்ன யோஜனா’ (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்.) என்று அழைக்கப்படுகிற இலவச ரேஷன் திட்டம், நாடு கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தபோது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலில் ஏழை எளியோருக்கு உதவும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதாகும் என்பது நினைவுகூரத்தக்கது.
3 மாதங்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை நீட்டிப்பதால் மத்திய அரசுக்கு ரூ.44 ஆயிரத்து 762 கோடி கூடுதல் செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி தரவும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.6,591.36 கோடி செலவாகும்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசுக்கு ரூ.6,261.20 கோடி செலவாகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு மொத்தமாக ரூ.12 ஆயிரத்து 852 கோடியே 56 லட்சம் செலவாகும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||