சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற செய்தி எப்படி வெளிவந்தது? என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எப்போதும் இருக்கக்கூடிய தேர்வு முறைதான் இருக்கும். பொதுவாக தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே நேரடியாக 12-ம் வகுப்பு பாடத்தை நடத்தி, அதில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும். தங்கள் பள்ளி அதில் சிறந்துள்ளது என்று காட்ட வேண்டும் என்று சென்று விடுகிறார்கள்.
11-ம் வகுப்பு பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டால், போட்டித் தேர்வுகளின் போது மாணவ-மாணவிகள் சிக்கிக் கொள்வார்கள். அதனை கருத்தில் கொண்டு தான் இந்த 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரையில் அதனை ரத்து செய்வது தொடர்பான எண்ணம் எதுவும் இல்லை. மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை. வழக்கமான நடைமுறையின்படியே 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நபார்டு வங்கியிடம் இருந்து நிதி கேட்டிருந்தோம். அதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளிகளில் எவ்வளவு கட்டிடம் தேவைப்படுகிறது? எவ்வளவு கழிவறை தேவைப்படுகிறது? என்பதை மனதில் வைத்து நிதி ஒதுக்குகிறோம். பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில், உள்கட்டமைப்பு வசதிகளை நிவர்த்தி செய்வதற்கான பணிகளை நாங்கள் செய்வோம்.
பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் தற்கொலை சம்பவத்தை குறைக்க அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மாணவச் செல்வங்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. அவர்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் தீட்டி கொண்டு இருக்கிறார். மதிப்பெண் மட்டுமே மாணவர்களை மதிப்பீடு செய்யாது. அவர்களுக்கான தனித்திறனை கொண்டுவர திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||