66 பணியிடங்களுக்கான குரூப்-1 நேர்முகத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
18 துணை கலெக்டர், 19 துணை போலீஸ் சூப்பிரண்டு, 10 வணிகவரித் துறை உதவி கமிஷனர், 14 கூட்டுறவு துறை துணை பதிவாளர், 4 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்பட குரூப்-1 பதவிகளில் காலியாக இருக்கும் 66 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.
இந்த பணியிடங்கள் முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 3-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.
அதில் தகுதி பெற்ற 3 ஆயிரத்து 104 பேர் அதற்கு அடுத்தபடியாக நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வில் கலந்து கொண்டனர். முதன்மைத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6-ந்தேதிகளில் நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவு கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி வெளியிடப்பட்டது.
அந்த தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் பதவிகள் தொடர்பான விதிகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்காக 137 பேர் தற்காலிகமாக அழைக்கப்பட்டனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலக வளாகத்தில் கடந்த 13, 14 மற்றும் 15 (நேற்று) -ந்தேதிகளில் நடத்தப்பட்டது.
கடந்த 3 நாட்களாக நடந்து வந்த நேர்முகத் தேர்வு முடிவு நேற்று மாலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதில் தேர்வர்கள் குரூப்-1 முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
நேர்முகத் தேர்வில் பங்குபெற்ற 137 பேரில் 135 பேரின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதில் 2 பேருடைய மதிப்பெண்களை மட்டும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த 135 பேரின் மதிப்பெண்ணை வைத்து பார்க்கும் போது, முதன்மைத் தேர்வில் 494.25, நேர்முகத் தேர்வில் 67.50 என மொத்தம் 561.75 மதிப்பெண் பெற்ற பெண் தேர்வர் முதல் இடத்தை பிடித்து இருப்பது தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||