பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் சாதி பற்றிய கேள்வி இடம்பெற்றதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வில், 1880-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரையிலான தமிழகத்தின் சுதந்திர தருணம் குறித்த பிரிவில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களில், சாதி தொடர்பான கேள்வி ஒன்று இடம்பெற்றது, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வினாத்தாளின் 11-வது கேள்வியாக ‘தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?' என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு 4 பதில்களும் கொடுக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு பதிலை மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த வினாவுக்கு, அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. சாதியை ஒழிக்க போராடிய பெரியார் பெயரை கொண்ட பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற கேள்வி கேட்பதா? என்ற கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு, அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
சாதி ரீதியான இந்த கேள்விக்கு பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்து, நேற்று மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பல்கலைக்கழக வினாத்தாள் அமைப்பது குறித்து பாடத்திட்டக்குழு வல்லுனர்கள் வழங்கும் பட்டியலில் உள்ள பிற பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகத்தில் உள்ள இணைவுபெற்ற கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் அனுபவத்தின் அடிப்படையில் தலைவராக நியமித்து, குறைந்தது 3 ஆண்டு கற்பித்தல் அனுபவம் உள்ள பிற ஆசிரியர்களுக்கு கேள்வித்தாள் தயாரிக்கும் பொறுப்பினை தலைவர் என்ற நிலையில் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட பேராசிரியரே நியமித்து வினாத்தாள்கள் தயாரிக்கப்படும்.
அவர்கள் தயாரித்து வழங்கும் வினாத்தாள்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டத்துக்குட்பட்டு அமைந்துள்ளதா? மதிப்பெண்கள் முறையாக பிரித்து வழங்கப்பட்டுள்ளனவா? சர்ச்சைக்குரிய வார்த்தைகள் ஏதேனும் உள்ளனவா? போன்றவற்றை தலைவர் என்ற நிலையில், அவரே இறுதி செய்து பல்கலைக்கழகத்துக்கு வினாத்தாள்களை அனுப்பி வைப்பார்.
அவ்வாறு அனுப்பும்போது ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு வேறுபட்ட வினாத்தாள்கள் தயாரித்து வழங்குவார்கள். அந்த வினாத்தாள்களில் ரேண்டம் முறையில் ஒன்று அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அச்சகத்தில் இருந்து முழுமையாக மூடி முத்திரையிடப்பட்ட பாக்கெட்டில் கல்லூரி பெயர், தேர்வு நடைபெறும் நாள், வினாத்தாள்களின் எண்ணிக்கை மற்றும் வினாத்தாளின் வரிசை எண் ஆகியவை அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படும். வினாத்தாள் கசிந்துவிடக்கூடாது என கருதி பல்கலைக்கழக தேர்வுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எவரும் அதை படிப்பதற்கு அனுமதி இல்லை. எனவே இந்த சர்ச்சைக்குரிய வினா குறித்து பல்கலைக்கழகத்துக்கு எந்தவிதமான உள்நோக்கமோ, நேரடியான தொடர்போ இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறான சர்ச்சைக்குரிய வினா கேட்கப்பட்டதன் அடிப்படையில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், கல்வியாளர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பின், அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் வருத்தத்தை தெரிவித்து கொள்வதுடன், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வினாக்கள் எழாதவாறு வினாத்தாள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்படுகிறது. மேலும் இந்த வினாத்தாள் குறித்து முறையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||