குரூப்-2, 2ஏ முதல்நிலைத்தேர்வு திட்டமிட்டபடி வருகிற 21-ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
குரூப்-2, 2ஏ முதல்நிலைத்தேர்வு திட்டமிட்டபடி வருகிற 21-ந்தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் 3 மணி நேரம் நடக்க உள்ளது. தேர்வர்கள் 8.59 மணிக்குள் தேர்வு அறையில் இருக்க வேண்டும். 9 மணிக்கு வந்தால் கூட அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல், பிற்பகல் 12.30 மணிக்கு தேர்வு நிறைவு பெற்றாலும், தேர்வர்கள் 12.45 மணி வரை இருக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் இருந்து இந்த தேர்வை 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 ஆண்களும், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பெண்களும், 48 திருநங்கைகளும் என மொத்தம் 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் எழுதுகிறார்கள். இந்த தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களாக 79 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில், 117 இடங்களில், 4 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 4 ஆயிரத்து 12 தலைமை கண்காணிப்பாளர்கள், 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்களும், 323 பறக்கும் படையும், 6 ஆயிரத்து 400 பரிசோதனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 843 பேர் எழுதுகிறார்கள். குறைந்தபட்சமாக நீலகிரியில் 3 மையங்களில் 5 ஆயிரத்து 624 பேர் எழுத இருக்கின்றனர்.
கொள்குறிவகை வினாக்களாக 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண் இந்த தேர்வுக்கு வழங்கப்பட உள்ளன. ஜூன் மாதம் இறுதியில் தேர்வு முடிவை வெளியிடவும், அதனைத்தொடர்ந்து வருகிற செப்டம்பர் மாதம் முதன்மைத்தேர்வு நடத்தவும் டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டு இருக்கிறது. முதன்மைத்தேர்வுக்கு, முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற வீதத்தில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு விடைத்தாள் பாதுகாப்பான முறையில் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு கொண்டு வரப்படும். அதற்கான ஏற்பாடுகளை டி.என்.பி.எஸ்.சி. உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
தேர்வு அறைக்கு வரும் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டின் அனைத்து பகுதிகளையும் பதிவிறக்கம் செய்து கையில் கொண்டு வரவேண்டும். மேலும் ஏதாவது ஒரு அடையாள அட்டையையும் வைத்திருப்பது அவசியம். முககவசம் அணிந்து வருவது அவரவர் பாதுகாப்பை பொறுத்தது. முககவசம் அணியாமல் வந்தால் அனுமதிக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. அணிந்துவந்தால் நல்லது.
இந்த மாதம் இறுதிக்குள் குரூப்-1 தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டுள்ளோம். திருத்தும் பணி 90 சதவீதம் வரை முடிந்துவிட்டது. குரூப்-4 பதவிக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்போது 7 ஆயிரத்து 382 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது கூடுதலாக 100 இடங்கள் வந்து இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||