முதற்கட்ட திருப்புதல் தேர்வின் போது வினாத்தாள்கள் வெளியான சம்பவத்தை போல, தற்போது 2-ம் கட்ட திருப்புதல் தேர்விலும் 12-ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துள்ளது. இதனால் கல்வித்துறை அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதற்கு 2 கட்டங்களாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று முடிந்தது.
அந்த தேர்வில் சில வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மீது போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டது.
கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு, பொதுத் தேர்வு நடத்த முடியாமல் போகும் நேரத்தில், இந்த திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை, பொதுத்தேர்வு மதிப்பெண்ணாக கணக்கில் கொள்வதற்கு ஏதுவாக அதனை முறையாக பராமரிக்கவும் கல்வித்துறை தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.
வினாத்தாள்கள் முன் கூட்டியே வெளியான சம்பவத்தை தொடர்ந்து, திருப்புதல் தேர்வு மதிப்பெண் முக்கியமாக கருதப்படாது என்றும், பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு அடித்தளமாக மட்டுமே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்றும் கல்வித்துறை அறிவித்தது.
மேலும் 2-ம் கட்ட திருப்புதல் தேர்வில் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதுவும் இடம் கொடுத்துவிடக்கூடாது. அதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மிக கண்டிப்போடு அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி, 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) தொடங்கி, தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முதற்கட்ட திருப்புதல் தேர்வை போல, 2-ம் கட்ட திருப்புதல் தேர்வில் இன்று (திங்கட்கிழமை) நடக்க இருந்த 12-ம் வகுப்பு கணித தேர்வுக்கான 2 வகையான வினாத்தாள்களும் நேற்று முன்கூட்டியே சமூக வலைதளங்களில கசிந்தன.
முதற்கட்ட திருப்புதல் தேர்வுக்கு ஒரே வகையான வினாத்தாள் வடிவமைக்கப்பட்டதால், வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி இருந்த நிலையிலும் தேர்வு ரத்து செய்யப்படாமல் நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து 2-ம் கட்ட திருப்புதல் தேர்வுக்கு 2 வகையான வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு, தேர்வு நடைபெறும் அன்றைய தினம் காலையில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு எந்த வினாத்தாள் அன்றைய தேர்வுக்கு பயன்படுத்தப்படுமோ? அவை அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தேர்வுகள் நடந்து வந்த நிலையிலும் தற்போது வினாத்தாள் கசிந்துள்ள விவகாரம், கல்வித்துறைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பாதுகாப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டும் எப்படி வினாத்தாள் வெளியானது? என்று கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.
12-ம் வகுப்புக்கான கணித பாடத் தேர்வில் 2 வகையான வினாத்தாள்களும் வெளியானதை தொடர்ந்து, இன்று தேர்வு அதே வினாத்தாளை கொண்டு நடைபெறுமா? கல்வித்துறை அதற்காக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வெளியான 2 வகையான வினாத்தாளையும் தவிர்த்து, புதிய வினாத்தாளை கொண்டு தேர்வுகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றனர்.
இந்த நிலையில் புதிய வினாத்தாள் நேற்று இரவோடு இரவாக தயாரிக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் 12-ம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் மின்னஞ்சல் வாயிலாக இன்று காலை அனுப்பி வைக்கப்படும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திடம் இருந்து பள்ளிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||