குரூப்-2 தேர்வில் முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்றும், விடைத்தாள் கொண்டு செல்லப்படும் வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் குரூப்-2 தேர்வுக்கான கேள்வித்தாள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு தேர்வு நடைபெறும்போது சம்பந்தப்பட்ட மையங்களுக்கு எடுத்து செல்லப்படும். இதனால் அங்கு பாதுகாப்பு வசதி எப்படி உள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் விஷ்ணுவுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-2, குரூப்-2ஏ ஆகிய தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஏற்கனவே இதில் ஆதார் பதிவு செய்தவர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். இவர்களுக்கு மே மாதம் 21-ந் தேதி தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களில் பணிக்கு எத்தனை பேர் தேவையோ அதில் 10 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் முதன்மை தேர்வு எழுதுவார்கள். அதன்பின்னர் அவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த தேர்வில் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது. விடைத்தாளில் அழியாத மை கொண்டு தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விடைத்தாள்களை சீல் வைத்து அவற்றை கொண்டு செல்லப்படும் வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதன்மூலம் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெற வாய்ப்பில்லை. கேள்வித்தாள் கசியாமல் இருக்க மிகுந்த பாதுகாப்புடன் அவை அனுப்பி வைக்கப்படும். கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்படும் கருவூலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
குரூப்-4 தேர்வுக்கான பணி நடந்து வருகிறது. இதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும். அப்போது அதற்கான பாடத்திட்டமும் சேர்த்து வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||