மாநில அரசின் கல்வி உரிமையில் தலையிடும் வகையிலான இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்’, என அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல்கலைக்கழக நிதிநிலைக்குழுவின் நிதியுதவியைப் பெறும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் கலை, அறிவியல் உள்ளிட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை 2022-23-ம் கல்வியாண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யு.இ.டி.) மூலம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்தேர்வை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் ஏற்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் (என்.சி.இ.ஆர்.டி.) பாட முறையிலான இத்தேர்வு, மாநிலப் பாட முறையில் படித்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை வழங்காது. இதனால், தமிழக மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். ஏற்கனவே ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழக அரசு போராடி வரும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கலை, அறிவியல் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புக்கான சேர்க்கைக்கும் பொது நுழைவுத் தேர்வு அறிவித்திருப்பது மாணவர் நலனுக்கு முற்றிலும் விரோதமானதாகும்.
ஏற்கனவே, 2006-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இருந்ததை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுடன் அந்த சட்டம் 15.03.2007 அன்று நடைமுறைக்கு வந்தது. அச்சட்டத்தின்படி மேற்கண்ட தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கப்பட்டார்கள். எனவே, தி.மு.க. அரசு, எப்போதும் நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்தே வந்துள்ளது.
இந்த புதிய நடைமுறையால் டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை பெருமளவில் குறையும் அபாயம் உள்ளது. மேலும், ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு என்ற முறையில் நடத்த இருக்கிற இத்தேர்வு, பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களின் நலனுக்கு எதிரானதாகும். இதனால் பயன்பெறப்போவது தனியார் பயிற்சி மையங்கள் தான்.
மாணவர்கள், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான தகுதியை எட்டிய பின்னரும், அப்பட்டப்படிப்புக்கான சேர்க்கைக்கு மீண்டும் ஒரு நுழைவுத்தேர்வு அவசியம் என்பது கேலிக்கூத்தான நடவடிக்கையாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் கல்வி இடம்பெற்றுள்ள நிலையில், புதிதாக கல்விக் கொள்கைகளை வகுக்கும் போதும், அதனை நடைமுறைப்படுத்தும் போதும், மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும். ஆனால் மாநில அரசின் நிலை மற்றும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. இது மாநில அரசின் கல்விக்கான உரிமையில் தலையிடும் நடவடிக்கை. எனவே, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழக மாணவர்களின் உயர்கல்வி பெறும் உரிமையை கடுமையாக பாதிப்படையச் செய்யும் இந்த பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||