அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சொந்த தொழிலில் ஈடுபட்டாலும், தனியாக வேறு தொழில் செய்வதாக புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தஞ்சையைச் சேர்ந்த ராதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நானும், எனது கணவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். கணவன், மனைவி இருவரும் அரசுப்பணியாளர்களாக இருக்கும்பட்சத்தில் இருவரில் யாராவது ஒருவர் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக சென்று பணியாற்றினால், அவர் அருகாமையில் உள்ள பணியிடங்களுக்கு இடமாறுதல் கோரினால் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அந்த வகையில் இடமாறுதலுக்கு நான் தகுதியானவர் என்பதால், விண்ணப்பித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எனது வசிப்பிடத்தின் அருகில் பணியிட மாறுதல் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் வசிப்பிடத்தில் இருந்து குறிப்பிட்ட அந்த பள்ளி 18 கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. எனவே மனுதாரருக்கு இடமாறுதல் அளிக்க இயலாது என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
அரசுப்பள்ளிகளுக்கு ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா, என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தேசத்தின் முதுகெலும்பான இளைஞர்களை சரியான முறையில் வழிநடத்த ஆசிரியர்கள் தவறுவது, நமது அரசியலமைப்பு கூறும் அடிப்படை கடமைகளை முறையாக செய்யாததற்கு சமம்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டியாக அரசுப்பள்ளிகளை உருவாக்க இயலாத நிலையே உள்ளது. ஆசிரியர் சமுதாயம் பெரும்பாலும் அவர்களின் சொந்த தேவைகளிலும், உரிமையிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கூட்டமைப்புகள் துறை ரீதியான விஷயங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மாவட்டந் தோறும் சிறப்புக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்த குழு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியாக தொழில் செய்வது, பகுதி நேர வேலைகளை செய்வது, டியூஷன் நடத்துவது, வீடுகளில் டியூசன் எடுப்பது போன்றவை பற்றிய தகவல்கள், புகார்கள், ஆவணங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப்பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர்கள் மீதான முறைகேடுகள், புகார்களை தெரிவிக்க தொலைபேசி, வாட்ஸ்-அப் எண் போன்றவற்றை உருவாக்கி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணியின் தரம், கற்பிக்கும் விதம், கல்வித்தரம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்து அவர்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவற்றில் தயக்கம், சுணக்கம் காட்டும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பு தொடர்பான தகவல்கள், புகார்கள், ஆவணங்களை சேகரித்து, அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அந்த சங்கங்கள் மற்றும் அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||