2022-23-ம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டுதல்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டு இருக்கிறது. அதில், சில என்ஜினீயரிங் படிப்புகளுக்கு கணித பாடம் கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
2021-22-ம் கல்வியாண்டுக்கான வழிகாட்டுதலை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிடும்போது, அனைத்து என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தை விருப்பத்துக்குரிய பாடமாக ஆக்கியது. இது பரவலான விமர்சனத்தை சந்தித்தது. தற்போது 2022-23-ம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டுதல்களை தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நேற்று முன்தினம் வெளியிட்டு இருக்கிறது.
அதில், என்ஜினீயரிங் படிப்புகளில் (இளநிலை, டிப்ளமோ) கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் ஆகிய படிப்புகளில் சேர 12-ம் வகுப்பில் வேதியியல் பாடம் படித்திருப்பது கட்டாயம் இல்லை.
அதேபோல் 29 என்ஜினீயரிங் படிப்புகளில் (இளநிலை, டிப்ளமோ) வேளாண் என்ஜினீயரிங், கட்டிடக்கலை, உயிரி தொழில்நுட்பம், உணவு என்ஜினீயரிங், தோல் தொழில்நுட்பம், பேஷன் தொழில்நுட்பம், பேக்கேஜிங் தொழில்நுட்பம், பிரிண்டிங் என்ஜினீயரிங், மருந்து என்ஜினீயரிங், ஜவுளி வேதியியல் போன்ற 10 படிப்புகளுக்கு கணித பாடம் கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
12-ம் வகுப்பில் கணித பாடத்தை படிக்காத மாணவர்களுக்கு கணிதம் முக்கியம் இல்லாத சில படிப்புகளில் சேருவதற்கு ஒரு வாய்ப்பை வழங்கவே இந்த புதிய வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட்டு இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார். மேலும், ‘தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்விமுறை 5+3+3+4 ஆக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் கடைசி 4 ஆண்டுகள் கலை, அறிவியல் மற்றும் வணிக பிரிவுகளாக இருக்கப்போவதில்லை. மாணவர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் உளவியல் அல்லது வேதியியல் மற்றும் கணினி அறிவியலை எடுக்கக்கூடிய கலை வகை படிப்புகளைத்தான் படிப்பார்கள்.
அத்தகைய மாணவர்கள் 12-ம் வகுப்பை முடித்தவுடன் வேறு ஏதேனும் புதிய திட்டத்தில் சேருவதற்கு இந்த புதிய வழிகாட்டுதல்கள் உதவும். அதற்காக முதல் 2 செமஸ்டர்களில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் அடிப்படை, பிரிட்ஜ் கோர்ஸ் முறையில் கற்பிக்கப்படும்' என்றும் அவர் கூறினார்.
இதுதவிர கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியியல், உயிர் தொழில்நுட்பம், தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடம், வேளாண்மை, என்ஜினீயரிங் கிராபிக்ஸ், தகவல் நடைமுறைகள், வணிகவியல், தொழில்முனைவு உள்ளிட்ட 14 பாடங்களில் ஏதேனும் ஒன்றை படித்த மாணவர்கள் இப்போது என்ஜினீயரிங் படிப்பை தொடரலாம் என்றும் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டிருக்கிறது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் இந்த புதிய வழிகாட்டுதலில் கூறப்பட்டு இருக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் அடிப்படைகளை பிரிட்ஜ் கோர்ஸ் மூலம் நடத்துவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றும், இந்த திட்டம் தரமற்ற என்ஜினீயர்களை உருவாக்கும் என்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||