‘நீட்’ தேர்வு அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்வு முறை இல்லை என்றும், அது மாணவர்களைக் கொல்லும் ஒரு பலிபீடம் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டமசோதாவை கவர்னர் திரும்ப அனுப்பியதைத் தொடர்ந்து தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் அதே மசோதாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, மாணவர்களின் நலனை எண்ணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்கீழ் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் இந்த நீட் விலக்கு சட்டமசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த மாமன்றத்தில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகும். 16 வயதில் அரசியல் களத்தில் நுழைந்தேன். எனது பொதுவாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. ஜனநாயகம் காக்க, மக்களாட்சியின் மாண்பைக் காப்பாற்றுவதற்காக, கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்துவதற்காக, கல்வி உரிமையை வென்றெடுப்பதற்காக நாம் இன்று கூடியிருக்கிறோம். ஏதோ ‘நீட்’ தேர்வுக்கு எதிராக விவாதிப்பதற்காக மட்டும் நாம் கூடவில்லை. நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை, உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவும் கூடியிருக்கிறோம்.
நூறாண்டுகளுக்கு முன்பே சமூகநீதிக்கு அடித்தளம் போட்டது இந்த சட்டமன்றம். சமூக நீதி, சட்ட நீதி, ஒடுக்கப்பட்டோர் உரிமை, தமிழினத்தின் மேன்மை, மொழி மேம்பாடு ஆகிய அனைத்துக்கும் அடித்தளம் அமைத்த இந்த சட்டமன்றத்தில் நின்று ‘நீட்’ என்ற சமூக அநீதியை அகற்ற, இந்த சட்டமன்றத்தால் முடியும்; நிச்சயமாக முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன்.
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு, சமூக நீதியை நிலைநாட்டிட, மாணவர்களின் மருத்துவ கல்வி தாகத்தைத் தணித்திட, 8 கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்த சட்டமன்றத்திற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள சட்டமியற்றும் அதிகாரத்தைப் பாதுகாத்திட நாம் இன்று கூடியிருக்கிறோம்.
‘நீட்’ தேர்வு, அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்வு முறை கிடையாது. அந்த சட்டத்தில் இடம்பெற்ற தேர்வு முறையும் கிடையாது. ‘நீட்’ என்பது இந்திய மருத்துவ கவுன்சில் ஒழுங்குமுறை விதிப்படி உருவாக்கப்பட்ட ஒரு தேர்வுதான். இந்த தேர்வு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதியன்று தீர்ப்பளித்தது. அதோடு இந்திய துணைக்கண்டம் முழுவதும் அந்த தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஆனால், மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு, ஒரு தனியார் பயிற்சி நிறுவனம் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டில் ‘நீட்’ தேர்வு குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தவுடனே, வழக்கை புதிதாக விசாரிப்பதாக 24.5.2016 அன்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அதன் அடிப்படையில்தான் மத்திய பா.ஜ.க. அரசு 11.4.2016 அன்று ஒரு அவசர சட்டம் பிறப்பித்து நாடு முழுவதும் நீட்டைச் செயல்படுத்தியது. ‘நீட்’ தேர்வு என்பதே தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமானது.
‘நீட்’ தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களது கல்வி உரிமைக்கு தடை போடுகிறது. அவர்களது மருத்துவ கனவில் தடுப்புச் சுவர் எழுப்புகிறது.
2019-ம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2020-ம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2021-ம் ஆண்டு தேர்வில் 15 பேர் முறைகேடு செய்ததாக மத்திய அரசே மக்களவையில் கூறியிருக்கிறது. ஆள்மாறாட்டம் செய்வது, வினாத்தாள்களை திருடுவது, விடைத்தாள்களை மாற்றி வைப்பது என அனைத்து முறைகேடுகளும் நடந்துள்ளன.
‘நீட்’ தேர்வு ஒன்றும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பல குளறுபடிகளைக் கொண்ட ‘நீட்’ தேர்வு மாணவர்களைக் கொல்லும் தேர்வு. ‘நீட்‘ என்பது தேர்வு அல்ல, ஒரு பலிபீடம். அரியலூர் அனிதா உள்ளிட்ட பல மாணவச் செல்வங்களை, இந்தியாவின் வருங்காலத் தலைமுறையை நாம் இழந்திருக்கிறோம். சில மாணவர்களைக் கல்லறைக்கும், சில மாணவர்களைச் சிறைச்சாலைக்கும் அனுப்பிய இந்த ‘நீட்’ தேர்வு தேவையா?
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நிறைவேற்றவில்லை. அந்த மசோதாவை நிராகரிப்பதற்காக அவர் சொன்ன காரணங்கள், சரியானவை அல்ல. இதில் நாம் வெற்றி பெறும்வரை நமது இந்த போராட்டத்தை விடமாட்டோம் என்பதை இந்த மாமன்றத்தில் அழுத்தந்திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்பியதன் மூலமாக தமிழ்நாடு மாநிலத்தின் உரிமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மாநில சுயாட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூட்டாட்சித் தத்துவம் தலைகவிழ்ந்து நிற்கிறது. அதுதான் வேதனைக்குரியது. அதுதான் கவலையளிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவை நிறுத்தி வைக்க முடியும், உதாசீனப்படுத்த முடியும் என்றால், இந்த இந்திய துணைக் கண்டத்தில் மாநிலங்களின் கதி என்ன? அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள மத்திய, மாநில அரசுகளின் உறவு எங்கே போகும்?
பல்வேறு இனம், மொழி, கலாசாரம், பண்பாடு கொண்ட மக்களின் நிலைமை என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் கொள்கை முடிவை, வெறும் நியமன பதவியில் அமர்ந்திருக்கும் கவர்னர் மதிக்காமல் திருப்பி அனுப்புவது மக்களாட்சித் தத்துவத்துக்கே எதிரானது அல்லவா? பிறகு எந்த நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள்? யாரை நம்பி வாக்களிப்பார்கள்? என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி ஆகும்.
வலிமையான அரசா, நேர்மையான அரசா என்றால், நேர்மையான அரசுதான் அனைவரும் விரும்பும் அரசாக இருக்க முடியும். நீதிக்கட்சி தலைவரான டி.எம்.நாயர் 1917-ம் ஆண்டிலேயே மொழிவாரி மாநிலங்களுக்காக குரல் கொடுத்தார். அவர் சொல்லி 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் மாநிலங்களின் உரிமைக்காக இன்னமும் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
நமக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தின் அடிப்படையில்தான், 13-9-2021 அன்று நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கச் சட்டமசோதாவை நிறைவேற்றினோம். அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டியது கவர்னரின் அரசியல் சட்டக் கடமை. அந்த கடமையை முறையாக இனியாவது அவர் செய்வார் என நினைக்கிறேன், எதிர்பார்க்கிறேன். அதன்படி, ‘நீட்’ விலக்கு சட்டமசோதாவை இந்த அவையில் மீண்டும் முன்மொழிகிறேன்.
கவர்னர் பதவியே வேண்டாமென்று முதன் முதலில் தி.மு.க. சொன்ன நேரத்தில் அது ரொம்ப பைத்தியக்காரத்தனம் என்று பேசிக்கொண்டிருந்த அரசியல் வட்டாரத்தின் ஒரு பகுதி, இன்று அதே கண்ணோட்டத்திற்கு வந்திருப்பதற்காக நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று அண்ணா இதே அவையில் குறிப்பிட்டதை நினைவுபடுத்திப்பார்க்கிறேன். அது போன்றதொரு சூழலை, நமது கவர்னர் நிச்சயம் உருவாக்க மாட்டார் என்று நம்புகிறேன். இந்த ‘நீட்' விலக்கு சட்டமசோதாவை காலம்தாழ்த்தாமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார் என்று நான் நம்புகிறேன்.
சட்டமசோதாவை திருப்பி அனுப்பி கவர்னர் வெளியிட்ட கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என்பது இங்குள்ள உறுப்பினர்களின் கருத்தாக அமைந்துள்ளது. எனவே, திருப்பி அனுப்பப்பட்ட தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமசோதா மறுஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பேச்சு மிகுந்த உணர்ச்சியுடன் காணப்பட்டது. உரையின் இறுதியில், ‘தமிழ்நாடு வாழ்க’ என மூன்று முறை சத்தமாக குரல் எழுப்பி உரையை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||