மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ‘நீட்' தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதனால், தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பா.ஜ.க.வை தவிர்த்த ஏனைய அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ‘நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் ‘நீட்' தேர்வில் இருந்து விலக்குகோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், 142 நாட்களுக்கு பிறகு அந்த மசோதாவை சபாநாயகருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிவிட்டார்.
கவர்னர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதன்படி, நேற்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் மு.அப்பாவு பேசினார். சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ‘நீட்' தேர்வு விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது தொடர்பாக, அவர் அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்தார். தொடர்ந்து பேசிய அவர், “தனிப்பட்ட முறையில் கவர்னரை பற்றி கண்டிப்பாக இங்கே பேசக்கூடாது. அதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.
அதன் பின்னர் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்திற்கு ‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து பேசினார். அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக, கட்சிக்கு ஒருவர் வீதம் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார்.
இந்த நேரத்தில் பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் எழுந்து பேச அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி கொடுக்க அவை முன்னவர் துரைமுருகன் சபாநாயகரிடம் சிபாரிசு செய்தார். அதன்படி, கிடைத்த அனுமதியில் நயினார் நாகேந்திரன் பேசினார். அவர், ‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை பா.ஜ.க. அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தார். மேலும், அவர் பேச முயன்றபோது வாய்ப்பு கிடைக்காத நிலையில், தங்கள் கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
அதன் பின்னர் புரட்சி பாரதம் கட்சி உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ம.தி.மு.க. உறுப்பினர் சதன் திருமலைகுமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் நாகை மாலி, பா.ம.க. உறுப்பினர் வெங்கடேசன், காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை, அ.தி.மு.க. உறுப்பினர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேசினார்கள்.
அனைவரும், தமிழகத்திற்கு ‘நீட்' தேர்வில் இருந்து விலக்குகோரும் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். நிறைவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன்பின்னர், ‘நீட்' தேர்வு விலக்கு மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. குரல் ஓட்டெடுப்பு மூலம் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை உடனடியாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைத்ததாக சட்டசபையில் சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார். அதன்படி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அத்துடன் நேற்றைய சட்டசபை சிறப்பு கூட்டம் முடிவடைந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 1.01 மணிக்கு நிறைவடைந்தது. அடுத்த சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||