கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி புத்தக கண்காட்சியை 16-ந் தேதி முதல் மார்ச் 6-ந் தேதிவரை நடத்த அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட சூழ்நிலையில், பேரிடர் மேலாண்மைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எந்தவித பாதிப்பும் இல்லாமல் புத்தக கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது.
அதுபோல இந்த ஆண்டும் இம்மாதம் 16-ந் தேதி முதல் மார்ச் 6-ந் தேதிவரை 19 நாட்கள் புத்தக கண்காட்சியை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஆயிரம் கடைகள் என்பதை 800 கடைகளாக குறைத்து நடத்த அனுமதிக்க வேண்டும். தொற்று பரவாமல் இருப்பதற்காக சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க இருப்பதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த சங்கத்தின் கோரிக்கையை அரசு கவனத்துடன் பரிசீலித்து, அந்த சங்கம் சார்பில் வரும் 16-ந் தேதியில் இருந்து மார்ச் 6-ந் தேதிவரை, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பிக்கிறது.
அந்த நிபந்தனைகளின்படி, 65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளை புத்தக கண்காட்சிக்கு அனுமதிக்கக் கூடாது. ‘கவுண்ட்டர்’ மூலம் நேரடியாக வழங்குவதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் நுழைவுக் கட்டணம் கொடுக்கலாம்.
வாசகர்கள் வந்து செல்வதற்கு வசதியாக கண்காட்சியின் ஒவ்வொரு அரங்கிலும் (ஸ்டால்) 2 வாசல்கள் வைக்கப்பட வேண்டும். ஒரே நேரத்தில் ஒரு அரங்கில் 3 வாசகர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அரங்கில் ஏசி வசதி இருக்கக்கூடாது.
ஒவ்வொரு வாசகருக்கும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை உரிய சமூக இடைவெளியுடன் புத்தகங்களை பார்வையிடவும், வாங்கவும் அனுமதிக்கலாம். காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை கண்காட்சியை நடத்தலாம். அரங்கப் பணியாளர்கள் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
வாசலில் வைக்கப்பட்டுள்ள சோப் அல்லது கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே வாசகரை கண்காட்சிக்குள் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு அரங்கத்திலும் கிருமிநாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரையில் வட்ட குறியிட வேண்டும். கண்காட்சியில் உள்ள பகுதிகள், கழிவறைகளை உரிய கால இடைவெளியில் சுத்தப்படுத்த வேண்டும். சமூக இடைவெளி விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதுதொடர்பான அறிவுரைகளை மக்கள் பார்வையில் படும் வகையில் வைத்திருக்க வேண்டும். ஒலி பெருக்கியிலும் கூற வேண்டும்.
சுகாதாரத் துறைக்கு ஒரு அரங்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். வாசகர்கள் கையுறை அணிந்து வர பரிந்துரைக்கலாம். வாசகர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
கண்காட்சி நிறைவடையும் ஒவ்வொரு நாளிலும் அரங்கத்தை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். அரங்கப் பணியாளர் உள்பட அனைவரையும் வெப்பமானி, பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு சோதித்த பின்னரே அரங்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும். குப்பை கொட்டுதல், எச்சில் துப்புதல் தவிர்க்கப்பட வேண்டும். உணவு, குளிர்பானங்களை அரங்கிற்குள் அனுமதிக்கக்கூடாது. தேவையான இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||