சமூக நீதியை உறுதி செய்யவும், சமத்துவம் மற்றும் சம வாய்ப்பை நிலைநிறுத்தவும் நீட் தேர்வு விலக்கப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முன்மொழிந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்கையை, தகுதித் தேர்வில் (நீட் அல்லாத தேர்வு) பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்துவதற்கான சட்டத்தை இயற்றும் வகையிலான சட்டமசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த செப்டம்பர் 13-ந் தேதி கொண்டு வந்தார். அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் அறிமுகம் செய்தார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் இந்த மசோதா, அவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக கவர்னரிடம் அன்றே அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஏழை எளிய மாணவர்களை பொருளாதார ரீதியாக சுரண்டுவதை நீட் தேர்வு தடை செய்வதாகக் கூறி, மசோதாவை சபாநாயகருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 1-ந் தேதி திருப்பி அனுப்பி வைத்தார். மசோதா திருப்பி அனுப்பப்பட்டதாக 3-ந் தேதியன்று செய்திக்குறிப்பை கவர்னர் அலுவலகம் வெளியிட்டது.
இந்த நிலையில் அதே சட்ட மசோதாவை நேற்று மீண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் கோரினார். அதைத் தொடர்ந்து, அவையில் இருந்த கட்சிகளின் ஏகமனதான ஆதரவோடு அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த சட்டம், தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்பிற்கான சேர்க்கைச் சட்டம் - 2021 என்று அழைக்கப்படும். மாநில அரசின் அறிவிக்கை வெளியிடப்படும் நாளில் இருந்து (ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்ற பிறகு) இது நடைமுறைக்கு வரும்.
தமிழகத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினால் (நீட்) ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இன்னும் சில ஆண்டுகளுக்கு நீட் தொடர்ந்தால் தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பு மிக மோசமாக பாதிக்கப்படும்; ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை பணியமர்த்த இயலாமல் போகலாம்; நீட் தேர்வினால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள், மருத்துவக் கல்வியில் சேர முடியாமல் போகலாம் என்று உயர்மட்டக் குழு கருத்து கூறியுள்ளது.
எனவே தேவையான சட்டத்தை இயற்றி, மருத்துவப் படிப்பில் நீட் தேர்வை நீக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாயத்தில் செல்வமிக்க பிரிவினருக்கு சாதகமாக நீட் தேர்வு இருக்கிறது. நீட் தேர்வு மூலம் நேர்மையான, நடுநிலையான சேர்க்கை நடைபெறாது என்றும் உயர்மட்டக் குழு கூறியுள்ளது. நடுநிலையான மாணவர்கள் சேர்க்கை இல்லையென்பதால், சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான நம்பிக்கையும், கனவையும் நீட் தேர்வு தகர்த்துள்ளது என்றும் உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது.
12-ம் வகுப்பு மதிப்பெண்ணே போதுமான நிலையில், கூடுதலாக நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்துகிறது. வேறு பயிற்சி பெறக்கூடிய நிலையில், பொருளாதாரத்தில் வளம் மிக்கவர்களையும், அதிக சலுகைகள் பெறக்கூடியவர்களையும் ஆதரிப்பதால் சமத்துவமின்மையை நீட் தேர்வு வளர்கிறது என்று உயர்மட்டக் குழு கூறுகிறது.
அந்த வகையில், சலுகை குன்றிய வகுப்பை சார்ந்த மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமை மறுப்பட்டு, அரசியலமைப்பு சாசனம் கூறும் சமத்துவம் என்பதற்கு நீட் எதிராக இருப்பதாக அரசு கருதுகிறது.
மேலும், இளநிலை படிப்புக்கு பிறகு வசதியான வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கிராமப் புறங்களில் மருத்துவ சேவை செய்யாமல், உயர் படிப்பிற்கு வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றனர். இதனால் மாநிலத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைகிறது. எனவே நீட் தேர்வு, மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்துவது என்று சொல்வது போலியானதாக உள்ளது.
உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை கருத்தில் கொண்டு, சமூக நீதியை உறுதி செய்யும் நோக்கத்தில் தமிழகத்தில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான தகுதியை, 12-ம் வகுப்பு (மேல்நிலைத் தேர்வு) தேர்வில், அந்தந்த பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில், கணக்கிடப்படும் நெறிப்படுத்தப்பட்ட மதிப்பெண் மூலமாக மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பெண்கள் நெறிப்படுத்துதல் முறை சரிசெய்யப்பட்டால், அது நியாயமான மற்றும் நடுநிலையான மாணவர் சேர்க்கையை வழங்க முடியும். எனவே மருத்துவ கல்வி படிப்பிற்கான சேர்க்கையை இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் 3-வது பட்டியலில் உள்ள 25-வது உள்ளீட்டின்படி, மாநில அரசே அதை முறைப்படுத்த தகுதியுடையதாக உள்ளது.
அதன் அடிப்படையிலும், உயர்மட்டக்குழு பரிந்துரையை கருத்தில் கொண்டும், சமூக நீதியை உறுதி செய்யவும், சமத்துவம் மற்றும் சம வாய்ப்பை நிலைநிறுத்தவும், பாதிக்க கூடிய அனைத்து சமுதாய மாணவர்களை பாதுகாக்கவும், நீட் தேர்வை விட்டுவிடவும், 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கையை வழங்கவும் இந்த சட்டம் இயற்றப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||