10, 12-ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வில், இன்று (திங்கட்கிழமை) நடைபெற இருந்த தேர்வின் வினாத்தாள் சமூக வலைதளங்களில் முன்கூட்டியே வெளியானதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விரைவில் நடத்தப்பட இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக திருப்புதல் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி 2 கட்டங்களாக திருப்புதல் தேர்வு நடத்தப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதில் முதல் திருப்புதல் தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுத்தேர்வு எவ்வாறு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறதோ, அதேபோல் இந்த திருப்புதல் தேர்வும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தது. அதற்கேற்றார் போலவே தேர்வுகளும் நடந்து வந்தது.
அந்த வகையில் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த முதல் திருப்புதல் தேர்வில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொறுத்தவரையில், தமிழ், கணிதம், விருப்பம் மொழி தேர்வுகள் இதுவரை நடந்து முடிந்து இருக்கிறது. இதேபோல், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், வேதியியல், புள்ளியியல், கம்ப்யூட்டர் அறிவியல் உள்பட சில பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தேர்வும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்பட சில பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகளும் ஏற்கனவே அறிவித்திருந்த அட்டவணைப்படி நடைபெற உள்ளது.
இந்தநிலையில் இன்று நடைபெற இருக்கும் ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கான 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் மற்றும் 12-ம் வகுப்பு கணித வினாத்தாள் நேற்று சமூக வலைதளங்களில் உலா வந்தன. இன்று நடைபெற உள்ள தேர்வுகளின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் இந்த வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உரிய விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி அரசு தேர்வுத்துறை இந்த விஷயத்தில் முழுகவனத்தை செலுத்த உள்ளது.
தேர்வு நடைபெறும் அன்றைய தினம் காலையில்தான் வினாத்தாள்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக சொல்லப்படும் இந்த சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் எப்படி வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது? என்று கல்வியாளர்கள், பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||