வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறாதது ஏன் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதா விளக்கம் அளித்தார்.
2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு, இடைநிலை மற்றும் பட்டதாரி தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு உட்பட 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் அவற்றுக்கான அறிவிக்கை எப்போது வெளியாகும், தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு பிப்.26-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைக்கப்பட்ட தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறவில்லை. முன்பு வெளியிடப்பட்டிருந்த சிறப்பாசிரியர் தேர்வு அறிவிப்பில் 1,598 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைக்கப்பட்டதால் கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கையோடு தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் இத்தேர்வுக்கு தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்தும், சுயமாகவும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு, 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெறாதது அனைத்து தேர்வர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதாவிடம் கேட்டபோது, "வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு விடுபடவில்லை. சிறப்பாசிரியர் தேர்வு தொடர்பாக சில விளக்கங்களைப் பெற வேண்டியுள்ளது. அவை பெறப்பட்ட பின்னர் சிறப்பாசிரியர் தேர்வு அறிவிப்பு, வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சேர்க்கப்பட்டு, தேர்வு நடத்தப்படும்" என்றார்.
2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் ஆசிரியர் தகுதித்தேர்வு, அரசு பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியானது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||