மேலாண்மை, கணினி பயன்பாடுகளில் முதுநிலை பட்டங்கள் உள்ளன. அவற்றை பல்கலைக்கழகங்களும், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளும்தான் வழங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.
நாட்டில் தற்போது எட்-டெக் கம்பெனிகள் என்று அழைக்கப்படுகிற கல்வி தொடர்பான தொழில்நுட்ப நிறுவனங்கள் பரவலாக உருவாகி வருகின்றன. இவற்றில் பல ஆன்லைன் கல்வி, பயிற்சி அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் மாணவர்களும், பெற்றோர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இது போன்ற பல நிறுவனங்கள், பயனாளிகளை கவர்வதற்கு பல்வேறு வகையான வணிக முறைகேடுகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்றத்திலும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், இந்த கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து தொலைதூரக்கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி முறையில் படிப்புகளை வழங்குவதற்கு எதிராக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் எச்சரித்தது.
இந்த தருணத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சஹஸ்ரபுதே, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் (அரசு) கல்வி தொடர்பான தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் எல்லைக்குள் வராத பகுதிகளில் ஈடுபட அனுமதிக்க முடியாது. விதிமுறைகள் விதிமுறைகள்தான்.
நாங்கள் பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்புகளுக்கு அங்கீகாரம் அளிகிறோம். ஆனால் அதை அவர்கள் சொந்தமாக வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களை சார்ந்தோ அல்லது அவர்களது வேலையை அவுட்சோர்ஸ் செய்யவோ கூடாது.
நாங்கள் நிறுவனங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்கள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,பட்டங்களை நேரடியாக வழங்குவதாக விளம்பரம் செய்கிறார்கள்.
மேலாண்மை, கணினி பயன்பாடுகளில் முதுநிலை பட்டங்கள் உள்ளன. அவற்றை பல்கலைக்கழகங்களும், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளும்தான் வழங்க வேண்டும்.
முன்னணி கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.எம்.கள்கூட, மேலாண்மை பட்டங்களை வழங்க அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் மேலாண்மை டிப்ளமோதான் வழங்கலாம். அப்படி இருக்கிறபோது நாங்கள் எப்படி அப்படி வழங்க தொழில்நுட்ப நிறுவனங்களை அனுமதிக்க முடியும்?
எந்தப்படிப்பில் சேருமுன்பும், மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் இணையதளங்களில் அவற்றின் அங்கீகாரம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவும், நாங்களும் அறிவுறுத்தி இருக்கிறோம்.
கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கியத்துவத்தை குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து தொடங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை நான் பலவீனப்படுத்தவில்லை.
திறமை மற்றும் பயிற்சியின் அடிப்படையில் அவை அனைத்தும் அவற்றுக்கே உரித்தான சொந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. அதற்கு அவை சான்றிதழ்கள் வழங்குகின்றன. ஆனால் அவை பட்ட சான்றிதழ்களோ, டிப்ளமோ சான்றிதழ்களோ அல்ல.
பல்கலைக்கழகங்களைப் பொறுத்தமட்டில், வகுப்புகள் அல்லது ஆன்லைன் தேர்வுகளை நடத்துவதற்கு கல்வி தொடர்பான தொழில்நுட்ப நிறுவனங்களின் தளத்தை பயன்படுத்தினால் மிகவும் நல்லது. ஆனால் அதற்கு அப்பால் இருக்க முடியாது. உரிமை ஒப்பந்த நிறுவனமாகவும் இருக்க இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||