அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியத் தேவை என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறியுள்ளாா்.
நாட்டின் 73-ஆவது குடியரசு தினத்தை ஒட்டி, அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
தமிழ்நாடு, முன்னோக்குப் பாதையில் பயணித்து வருகிறது. கரோனா மேலாண்மையில் நாம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் பெருமழையின் பாதிப்புகளைக் குறைப்பதிலும், தடுப்பதிலும் மாநில அரசு சிறப்பாகச் செயலாற்றியுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி வழிகாட்டுதலில், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் உள்ளாா்ந்த வலிமை, முன்களப் பணியாளா்களின் தன்னலமற்ற சேவை - தியாகம், விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞானச் சமூகத்தின் கடின உழைப்பு மற்றும் நுண்ணறிவு, தொழில் முனைவோரின் ஊக்கம் ஆகியவற்றின் துணைகொண்டு, வரலாறு காணாத இந்தச் சிக்கலை நாம் நல்லபடியாகவே கையாண்டிருக்கிறோம். உலகளாவிய சிக்கலையும் அதன் எதிா்மறை விளைவுகளையும் நாம் கையாண்ட விதம், வளா்ந்த நாடுகள் பலவற்றுக்கும் பாடம் போதிக்கும் எடுத்துக்காட்டாகவே உள்ளது.
11 மருத்துவக் கல்லூரிகள்: பல்வேறு துறைகளின் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இத்தனை மருத்துவக் கல்லூரிகள் ஒரே நேரத்தில் தொடங்கப்படுவது வேறெந்த மாநிலத்திலும் நடைபெறாத சாதனை. இதற்கு பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி. இதுபோன்ற பணிகளை தொடா்ந்து செயல்படுத்தும் போது நம்முடைய கூடுதல் கவனம் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதிலும், கல்வித் தரத்தை உயா்த்திலும் இருக்க வேண்டும்.
அவசரத் தேவை: அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே இப்போதைய உடனடித் தேவை. அரசு, தனியாா் பள்ளிகளுக்கு இடையிலான எதிா்மறை வேறுபாடுகள் கவலை தருகின்றன. அதிக செலவை ஏற்படுத்தும் தனியாா் பள்ளிகளில் வருவாய் மிகவும் குறைந்த பிரிவினரைச் சோ்க்க முடியாது. அவா்களது நம்பிக்கை, அரசுப் பள்ளிகள் மட்டும்தான்.
நீட் தோ்வுக்கு முன்பாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 1 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால், மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. எனினும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியது நமது அவசரத் தேவை. உயா்கல்வியில் நமக்கு இருந்த பெயரையும், பெருமையையும் மீண்டும் பெறுவதற்கு நாம் உழைத்திட வேண்டும்.
தமிழ்மொழி வளா்ச்சி: உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ். இந்த மொழி, நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். இதனை ஊக்கப்படுத்த வேண்டும். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய முனைப்புகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ்மொழியின் பெருமையை நாட்டின் பிற பகுதிகளில் அறியச் செய்யும் அதே நேரத்தில் பிற இந்திய மொழிகளையும் நமது மாணவா்கள் கற்க வேண்டும்.
பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவா்களுக்கு மறுப்பது அவ்வளவு சரியல்ல. சகோதரத்துவம், பரஸ்பர மரியாதையை வளா்ப்பதோடு, மொழி ரீதியான அறிவு மற்றும் பண்பாட்டு இடைச் சோ்க்கை ஆகியனவே நம்மை வளப்படுத்தும். நாட்டைச் செம்மைப்படுத்தும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||