மாணவி லாவண்யா தற்கொலை விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும், தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி வருமாறு:-
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டில் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விஷயம் மிகவும் உணர்வுபூர்வமானதாகும். அதுபற்றி தகவல் வந்ததும் முதல்-அமைச்சர் என்னை அங்கு சென்று பார்க்கும்படி கூறினார்.
உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் அதுபற்றி பேசினேன். மாவட்ட கல்வி அதிகாரிக்கும் அதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் விசாரிக்கும்படி உத்தரவு வழங்கினோம்.
இந்த விவகாரம் தற்போது கோர்ட்டு விசாரணையில் இருந்தாலும், பல்வேறு அமைப்புகள் பல்வேறு காரணங்களை கூறுகின்றன. அரசை பொறுத்தவரை, மத, சாதி பாகுபாடு மற்றும் அரசியல் அதற்குள் புகுந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
இந்த சம்பவத்தில் காரணம் எதுவாக இருந்தாலும், அதற்கு தூண்டுதலாக யார் இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பெண்ணின் பெற்றோரின் உணர்வுகளுக்கும், இதுதொடர்பாக போராடிக்கொண்டிருக்கிற பல்வேறு அமைப்புகளின் உணர்வுகளையும் மதிக்கும் விதமாகவும், உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை கண்டறியவும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கு காரணமாக, 62 வயது வார்டன் ஒருவர் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக கூறியிருக்கிறார். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் அங்கு படித்து சென்றுள்ள பழைய மாணவர்களிடமும் கருத்து கேட்டிருக்கிறோம். போலீஸ் துறையிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதில் தவறு செய்தவர் யாராக இருந்தாலும் உரிய தண்டனையை அரசு பெற்றுத்தரும்.
மாணவியின் தற்கொலையில் தற்போது கூறப்படும் காரணம் புதிதாக உள்ளது. பள்ளிக்கல்வி துறை மூலம் நடத்தப்பட்டு, பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் விசாரணைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மதமாற்றம் என்பது உள்பட அரசியல் ரீதியாக பல கருத்துகள் கூறப்படுகின்றன. அதெல்லாம் நடக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. மரண வாக்குமூலத்தை முறைப்படி குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவர்கள்தான் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் அதையும் மீறி சில அமைப்புகள் சென்று, ‘இப்படித்தான் நடந்திருக்குமா?’ என்று கேள்வியால் தூண்டுகின்றனர். அதிலும், அந்த மாணவியால் அதை உறுதியாக சொல்லவில்லை. ‘இருந்திருக்கலாம்’ என்றுதான் பதிலளிக்கிறார்.
மாணவியின் மரணம் ஒரு சோகமான விஷயம். மாணவியின் பெற்றோர் பள்ளி கட்டணத்தை கட்டாத சூழ்நிலையில், தற்போது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வார்டன்தான் கட்டணம் செலுத்தி படிக்க வைத்திருக்கிறார். எது எப்படி என்றாலும், அந்த மாணவிக்கு மனஉளைச்சல் ஏற்பட அவர்தான் காரணமாக இருந்திருக்கிறார் என்ற வகையில்தான் வார்டன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரும் இதை அரசியல் ஆக்காதீர்கள். அந்த மாணவியிடம் சென்று கருத்து கேட்டது தவறு. அதில் சட்டரீதியாக நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், இதை தீர விசாரிக்கிறோம். அதில் வரும் உண்மை எதுவென்றாலும் முதல்-அமைச்சர் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பார். புதிய அரசு அமைந்து இதுபோன்ற சில சம்பவங்கள் நடந்தாலும்கூட, இந்த சம்பவத்தை வேறு கோணத்தில் கொண்டு செல்கின்றனர். அரசும் அனைத்து கோணத்தில் அந்த சம்பவத்தை விசாரிக்கிறது. இனியும் இப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.
மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் மத்திய கமிட்டி அமைத்து கருத்துகளை பெற்று வருகிறோம். ஆனாலும் அந்த கமிட்டிக்கு உதவி எண்கள் மூலமாக பல போலியான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. என்றாலும் அதையும் விசாரிக்கிறோம். இதுபோன்ற விஷயங்களில் புது திட்டம் ஒன்றை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. அது பின்னர் அறிவிக்கப்படும்.
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ஏப்ரல் கடைசியிலா? அல்லது மே மாதத்தில் நடத்தலாமா? என்று பேசிக்கொண்டிருக்கிறோம். எப்படியென்றாலும் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும். ஊரடங்கு தளர்வு கூட்டத்தில் இதுபற்றிய கருத்துரு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||