Home »
EDU UPDATES
» கொரோனாவை காரணமாக வைத்து பள்ளிகளை மூடுவதை ஏற்க முடியாது - உலக வங்கியின் கல்வி இயக்குனர் தகவல்.
பள்ளிகளை திறப்பதால் தொற்று பரவுவதற்கு ஆதாரம் இல்லை கொரோனாவை காரணமாக வைத்து பள்ளிகளை மூடுவதை ஏற்க முடியாது உலக வங்கியின் கல்வி இயக்குனர் தகவல்
-
- கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் கல்வித்துறையும் ஒன்று. கடந்த 2020-ம் ஆண்டு முதல் பலமுறை பள்ளிகள் மூடல், ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் ரத்து என மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
- இவ்வாறு கொரோனாவால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்மி சாவேத்ரா தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.
- இந்த நிலையில் ஜெய்மி சாவேத்ரா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்தார். அப்போது கல்வி நிறுவனங்களை திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
- பள்ளிகளை திறப்பதற்கும் கொரோனா பரவுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. பள்ளிகளை திறப்பதால் தொற்று பரவுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.எனவே கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது நியாயம் இல்லை. அதை ஏற்க முடியாது. புதிய அலைகள் வந்தால் கூட, பள்ளிகளை மூடுவதை கடைசி தீர்வாகவே வைக்க வேண்டும்.உணவு விடுதிகள், பார்கள், வர்த்தக வளாகங்களை திறந்து வைத்துவிட்டு, பள்ளிகளை மூடுவதில் அர்த்தம் இல்லை. இதில் சாக்குப்போக்குக்கு இடமில்லை.
- 2020-ம் ஆணடு நாம் அறியாமைக் கடலில் பயணித்துக்கொண்டிருந்தோம். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி எது என்று நமக்குத் தெரியவில்லை. எனவே உலகின் பெரும்பாலான நாடுகளின் உடனடி எதிர்வினை பள்ளிகளை மூடுவதாக இருந்தது. ஆனால் அதன்பிறகு 2020 மற்றும் 2021-ன் பிற்பகுதியில் இருந்து கிடைத்த ஆதாரத்தின்படி, பல அலைகள் வந்தபோதும், பல நாடுகள் பள்ளிகளை திறந்துள்ளன.
- பள்ளிகள் திறக்கப்படுவது வைரஸ் பரவுவதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதை நாங்கள் ஆய்வு செய்தபோது, அது இல்லை என்பதையே கண்டறிந்துள்ளோம். பல பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டபோதும் அலைகள் இருந்தன. எனவே தொற்று பரவலுக்கும், பள்ளிகள் திறப்புக்கும் தொடர்பு இல்லை.
- குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளானாலும், இறப்பு மற்றும் நோய்த்தீவிரம் மிகவும் அரிதானது. குழந்தைகளுக்கான ஆபத்துகள் குறைவு.
- குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பிறகே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையை எந்த நாடும் வைக்கவில்லை. ஏனென்றால் இதற்குப் பின்னால் எந்த அறிவியலும் இல்லை மற்றும் பொதுக் கொள்கை கண்ணோட்டத்தில் அது அர்த்தமற்றது.
- இந்தியாவில் பள்ளி மூடல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள தாக்கம், ஏற்கனவே நினைத்ததை விட மிகவும் கடுமையானது. இந்தியாவில் கற்றல் வறுமை 55 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு ஜெய்மி சாவேத்ரா கூறினார்.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||