அடுத்த நிதி ஆண்டில் 5 ‘ஜி’ அலைக்கற்றை ஏலம் விடப்போவதாக பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து நேற்று பேசும்போது கூறியதாவது:-
பொதுவாக தொலைத்தொடர்பு வசதிகள் குறிப்பாக 5 ‘ஜி’ தொழில்நுட்ப வளர்ச்சியை செயல்படுத்தி வேலை வாய்ப்புகளை வழங்க முடியும்.
தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், 5 ‘ஜி’ செல்போன் சேவைகளை வழங்குவதற்கு 2022-23 நிதி ஆண்டுக்குள் 5 ‘ஜி’ அலைக்கற்றைகள் ஏலம் விடப்படும்.
உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டத்தின் ஒரு பகுதியாக 5 ‘ஜி’க்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வடிவமைப்பு தலைமையிலான உற்பத்திக்கான திட்டம் தொடங்கப்படும்.
கிராமப்புறங்களிலும், தொலைதூரப்பகுதிகளிலும் மலிவு விலையில் ‘பிராட்பேண்ட்’ மற்றும் செல்போன் சேவை பெருக்கத்தை செயல்படுத்துவதற்கு ‘யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் பண்டி’ன் கீழ் ஆண்டு வசூலில் 5 சதவீதம் ஒதுக்கப்படும். இது ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளின் வணிகமயமாக்கலை ஊக்குவிக்கும்.
அனைத்து கிராமங்களுக்கும், அவற்றில் வசிப்பவர்களுக்கும் இ-சேவைகள், தகவல் தொடர்பு வசதிகள், டிஜிட்டல் ஆதாரங்களுக்கான அணுகல் போன்றவை நகர்ப்புறங்கள் மற்றும் அவற்றில் குடியிருப்பவர்களைப் போன்றே கிடைக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம் ஆகும்.
இதற்காக அனைத்து கிராமங்களிலும் கண்ணாடி இழை கேபிள்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் 2022-23 நிதி ஆண்டில் பொதுத்துறை, தனியார் துறை மூலம் ‘பாரத் நெட்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இது 2025-ல் நிறைவு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணாடி இழை கேபிள்களின் சிறந்த மற்றும் திறமையான பயன்பாட்டை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||