அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக நேர்காணலில் குவியும் வேலைவாய்ப்பு சலுகைகள் 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகம் என தகவல்
- 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணலில் (கேம்பஸ் இன்டர்வியூ) வேலைவாய்ப்பு சலுகைகள் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் மட்டும் ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.
- அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையில் வளாக நேர்காணலை நடத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக முதல்முறையாக கடந்த ஆண்டில் வளாக நேர்காணல் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.
- அதன் தொடர்ச்சியாக 2-வது ஆண்டாக இப்போதும் ஆன்லைன் மூலம் வளாக நேர்காணலை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவற்றில் படிக்கும் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.
- இந்த வளாக நேர்காணலில் சிஸ்கோ, சாம்சங் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, டி.இ. ஷா, வெல்ஸ் பார்கோ, சொசைட் ஜெனரல், பாங்க் ஆப் நியூயார்க் மெலன், வால்மார்ட் லேப்ஸ், போர்டு, ரிலையன்ஸ், ஹூண்டாய், ஆல்ஸ்டோம், ஓலா எலக்ட்ரிக், ராப்தி எனர்ஜி, டைகர் அனலிடிக்ஸ், குளோபல் அனலிடிக்ஸ், காட்டர்பில்லர் உள்பட பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
- அதன்படி, இந்த ஆண்டு வளாக நேர்காணலில் இதுவரை 142 நிறுவனங்கள் பங்கேற்று, 1,700 வேலைவாய்ப்பு சலுகைகளை வழங்கி இருக்கின்றன. இது மேலும் அதிகரித்து, 2 ஆயிரம் வேலைவாய்ப்பு சலுகைகள் வரை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சராசரி ஆண்டு சம்பளம் ரூ.6 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- அந்தவகையில் அதிகபட்சமாக இந்த ஆண்டில் ஆண்டுக்கு ரூ.36 லட்சம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு சலுகை கிடைத்து இருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவுகளை சேர்ந்த சுமார் 95 சதவீதம் பேர் தகவல் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.
- கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு சலுகைகள் குவிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 40 சதவீதம் வேலைவாய்ப்பு சலுகைகள் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் 120 நிறுவனங்களில் இருந்து 1,100 வேலைவாய்ப்பு சலுகைகள்தான் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
- சாப்ட்வேர் என்ஜினீயர்கள் தேவை தற்போது அதிகரித்து இருப்பதால், தகவல் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே வழங்கிய வேலைவாய்ப்பு சலுகைகளை விட இரண்டு மடங்கு அதிகம் இந்த ஆண்டு வழங்குகின்றன. அதனால் வேலைவாய்ப்பு சலுகைகள் உயர்ந்து வருகிறது என்று பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||