Home »
EDU UPDATES
» தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 31-ந்தேதி வரை விடுமுறை தேர்வுகளும் தள்ளிவைப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 31-ந்தேதி வரை விடுமுறை தேர்வுகளும் தள்ளிவைப்பு
- கொரோனா பரவல் காரணமாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாகவும், நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுவதாகவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் நோய் பாதிப்பு அதிகரித்ததால், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, தற்போது ஆன்லைன் மூலம் அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட இருப்பதால், அவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி வகுப்புகளும் நடந்து வந்தன. இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வந்த வழக்கு ஒன்றில், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடரலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
- அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி துறை சார்பில் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த ஆலோசனையின்படி எடுக்கப்பட்ட முடிவு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
- இதேபோல், நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதற்கேற்றாற்போல், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு வருகிற 19-ந்தேதி திட்டமிட்டபடி தொடங்கும் என்றும், அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது என்றும் கல்வித்துறை தரப்பில் நேற்று காலை தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
- ஆனால் அந்த தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழக அரசு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளித்தும், திருப்புதல் தேர்வை தள்ளிவைத்தும் உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
- கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி, வருகிற 31-ந்தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
- இதே போல், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதியன்று (நாளை மறுதினம்) தொடங்கி நடைபெற இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது என்று கடந்த 5-ந்தேதி தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- ஆனால் நேற்று வெளியான அறிவிப்பில், 31-ந்தேதி வரை உள்ள ஊரடங்கு நிலவரப்படி, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சுமார் 27 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுமா? என்பது தொடர்பான முழுமையான தகவல் அதில் இல்லை.
- இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டதற்கு, 'ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் அவர்களுக்கு நடக்கும். ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு ஏதுவாக பயிற்சிகளும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.
- அதேபோல், ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்றும், அவர்கள் தங்களுடைய அலுவல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கல்வித்துறை தரப்பில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||