1938 தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு என்பது நவம்பர் 1938 இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாடு ஆகும். தமிழ்நாட்டில் பெண்கள் பல வகையான அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருந்த அச் சூழலில் இந்தப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்களை ஈடுபட வைத்ததிலும், ஈ.வெ.ரா பெரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்டதும் [1] வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள். மீனாம்பாள், பண்டித நாராயணி, வா. பா தாமரைக் கண்ணி, பா. நீலாம்பிகை, மூவலூர் இராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் உட்பட்ட பெண்கள் குழு முன்னின்று நடத்தியது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
1.இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது.
2.மணவினை காலத்தில் புரோகிதர்களையும் வீண் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கிவிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
3.மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு சமுகமாய் வாழ்வதற்கு இன்று பெருந்தடையாயிருப்பது சாதி வேற்றுமையாதலால், சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமையாத கலப்பு மணத்தை இம்மாநாடு ஆதரிக்கின்றது.
4.தமிழ் மாகாணத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக்கொள்வதுடன், பிறமொழிகள் தமிழ் மொழிக்கு விரோதமாகப் பள்ளிகளின் கட்டாயப் பாடமாக வைக்கக்கூடாதெனத் தீர்மானிக்கிறது.
5.சென்னையில் முதலாவது மாகாண நீதிபதியாகவிருக்கும் தோழர் அபாஸ் அலி அவர்கள், காலஞ்சென்ற பா.வே.மாணிக்க நாயக்கரவர்கட்குத் தமிழ் தெரியாது; அவர் தெலுங்கர் என்று கூறியதையும், நாடார் சமுகத்தைக் கேவலமான வார்த்தைகளால் கூறியதையும், தோழர் மு.இராகவையங்கார், தொல்காப்பியம் 2000 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கூறியதை மறுத்து 50 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று கூறியதைக் கண்டிப்பதுடன், தமிழறிவும் நூலறிவும் இல்லாத ஒரு நீதிபதி தன்னளவுக்கு மீறிக் கோர்ட்டில் பேசி வருவதை அரசாங்கத்தாரும், ஹைக்கோர்ட்டாரும் கவனித்து ஆவன செய்யும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||