அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு அரசாணை வெளியீடு | அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு காரணமாக ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொண்டது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் நேற்று வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 10 பிரிவுகள் உள்ளன. இது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் இந்த பாடப்பிரிவுகளில் 1,020 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் 2013-ம் ஆண்டு சட்டப்படி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை-2018 ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வில் சேர்த்து நடத்த வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்து இருந்தார். அதை அரசு நன்கு பரிசீலனை செய்து என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கு தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்த இந்த கல்வியாண்டு (2018-2019) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் இனி அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்த இருக்கிறது.
ALL OTHER NEWS |
STUDY MATERIALS DOWNLOAD |
ALL QUESTION PAPERS DOWNLOAD |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||