அரசு ஆசிரியர்கள் சங்கம் தொடங்க தடைவிதிக்க முடியாது ஐகோர்ட்டு கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை பதில் | அரசு ஆசிரியர்கள் சங்கம் தொடங்குவதற்கு தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆங்கில வழி பள்ளி தொடங்குவதற்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஒரு வழக்கு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தவறு செய்யும் அரசு பள்ளி ஆசிரியர்களை, ஆசிரியர்கள் சங்கம் காப்பாற்றுவதால் அந்த சங்கங்கள் தொடங்குவதற்கு தடை விதித்தால் என்ன? என்பது உள்பட 20 கேள்விகளை கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை செயலாளர் நந்தகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மாநிலம் முழுவதும் உள்ள 37,211 அரசு ஆரம்பப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 13,789 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த முறையான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தான் சிறந்த கல்வித்தரம், செயல்பாடு, ஒழுக்கம் எல்லாம் இருப்பதாக பெற்றோர் கருதுகின்றனர். அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் மத்தியிலும் அரசு பள்ளிகள் மீதான கண்ணோட்டம் மாறவேண்டும். தனியார் பள்ளிகளில் படித்தால் தான் ஆங்கிலப் புலமை கிடைக்கும் என்ற பெற்றோரின் எண்ணம் தவறானது. அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை அதிகரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அரசு ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் தான் கல்வி மேம்படும் என்ற ஐகோர்ட்டின் எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால், தங்களது குழந்தைகள் எந்த பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என்று தேர்வு செய்யும் உரிமை ஆசிரியர்களிடம் உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மனம்மாறி தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் மட்டுமே ஐகோர்ட்டின் எண்ணம் நிறைவேறும். ஆசிரியர்கள் சங்கங்களுக்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசிரியர்களுக்கு அந்த உரிமையை வழங்க மறுக்க முடியாது. அவ்வாறு மறுப்பது பாரபட்சமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ALL OTHER NEWS ||| விரிவாக படியுங்கள் |
| DOWNLOAD |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||