இரண்டரை மாத இழுபறிக்குப் பின், தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளிலும் இன்று முதல், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் துவங்குகின்றன.சுதந்திர தின விழாவுக்காக பள்ளிகளுக்கு வந்த மாணவர்களிடம், நேற்றே பெருமளவிற்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மாணவர்களுக்கு முழுமையாக இன்று காலை புத்தகங்களை வினியோகித்து, உடனடியாக வகுப்புகளை ஆரம்பிக்க கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.சமச்சீர் கல்வித் திட்டத்தில், முந்தைய அரசு எடுத்த
நடவடிக்கைக்கு எதிராக, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, கடந்த இரண்டரை மாதங்களாக, பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாமல் வகுப்புகள் நடந்தன.சமச்சீர் கல்வி பாடத்திட்டமா, பழைய பாடத்திட்டமா? என தெரியாமல் இழுபறி நிலையில் இருந்து வந்த இவ்வழக்கில், நடப்பு கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, கடந்த 9ம் தேதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.இதைத் தொடர்ந்து, "சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்தும்" என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கல்வித் துறை அதிகாரிகள் மேற்பார்வையில், மாநிலம் முழுவதும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை, பள்ளிகளுக்கு வினியோகிக்கும் பணி, கடந்த சில தினங்களாக தீவிரமாக நடந்தது. நீக்க வேண்டிய பகுதிகளை கல்வித் துறை அறிவித்து, அதில் எந்தெந்த பகுதிகளை மறைக்க வேண்டும், எந்தெந்த பகுதிகளை கறுப்பு மை பேனாவால் அடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், கடந்த இரண்டு நாட்களாக பணிகள் நடந்தன.சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், இன்று வகுப்புகளை துவக்க திட்டமிட்டு, அதற்கேற்ப பணிகள் முடுக்கி விடப்பட்டன.
பல்வேறு பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.எனினும், நீக்கப்பட வேண்டிய பகுதிகளை மறைக்கும் பணிகள் முழுமையாக முடிவடையாததாலும், பெரும்பாலான மாணவர்கள் நேற்று பள்ளிகளுக்கு வராததாலும், பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி முழுமை அடையவில்லை. எனவே, இன்று காலை பள்ளி துவங்கியதும், அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்களை வினியோகம் செய்ய, பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன. பாடப் புத்தகங்கள் வழங்கிய சூட்டோடு சூடாக, இன்றே வகுப்புகளும் துவங்குகின்றன. இதன் மூலம், இரண்டரை மாதங்களாக பாடப் புத்தகங்கள் இல்லாமல் தவித்து வந்த மாணவர்களின் பிரச்னை, ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||