தமிழ்நாட்டில் கடந்த 1 1/2 மாதமாக மாணவர்களிடம் பாடப்புத்தகங்கள் இல்லாதது வருத்தத்தை தருகிறது என, ப.சிதம்பரம் கூறினார்.தமிழ்நாடு ஆரம்ப கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச ஆரம்ப கூட்டணி கல்வி குழந்தைகளின் கல்வி உரிமை மாநில மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,தமிழ்நாட்டில் கல்வியின் முக்கியத்துவத்தை அனைத்து கட்சிகளும் புரிந்து வைத்துள்ளன. ஒவ்வொரு கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அடிப்படையில் தரமான கல்வி வேண்டும்என்பதைத்தான் முக்கியமாக கருதுகிறார்கள். உயர்கல்வி வரை எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவேண்டும்.ஆனால் ஜார்கண்ட், சத்தீஷ்கர் மாநிலங்களில் வறுமை, வன்முறை அடிக்கடி நிகழ்வதற்கு காரணம் அங்கு போதிய கல்வி வாய்ப்பு கிடையாது. 20 கி.மீ. தூரத்திற்கு பல ஊர்களில் பள்ளி கிடையாது. தமிழ்நாட்டில் ஆரம்ப கல்வி எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆரம்ப கல்வி பணி அதோடு முடிந்து விடுவதில்லை. ஆரம்ப கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனது காலத்தில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை இருந்தது. இன்று எனது பேத்தி காலத்தில் 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. அடுத்த தலைமுறையில் ஒரு ஆசிரியருக்கு 60 மாணவர்கள் என்ற நிலை வந்து விடக்கூடாது. எனவே இது கல்வியின் வளர்ச்சி அல்ல. அது குறைவதாகவே கருத வேண்டும்.
மேலை நாடுகளில் ஒரு ஆசிரியருக்கு 25 மாணவர்கள் என்ற நிலை உள்ளது. பி.எச்டி போகும்போது ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவர் என்று நியமிக்கப்படுகிறது. எனவே 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்காததற்கு ஆசிரியர் பற்றாக்குறை காரணம் அல்ல. ஆசிரியர்களும் உள்ளனர். மாணவர்களும் உள்ளனர். இரண்டுக்கும் உள்ள இடைவெளி என்னவென்றால் பணம் இருக்கிறது. மனம் இல்லை எனறுதான் பொருள்.
எனவே ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்பதை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். ஒவ்வொரு குழந்தைகளும் கட்டாயம் 10வது வகுப்பு வரையாவது படிக்க வேண்டும். அதற்காகத்தான் இலவச கட்டாய கல்வியும் வந்துள்ளது. ஆசிரியர்களை அலுவலக பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். அதை நான் வரவேற்கிறேன்.ஆனால் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். கணக்கே தெரியாத மற்றவர்கள் கையில் கணக்கெடுப்பு பணியை கொடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி சர்ச்சைப் பொருளாக மாறி உள்ளது. வழக்கு கோர்ட்டில் நடக்கிறது. கடந்த 1 1/2 மாதமாக மாணவர்களிடம் பாடப்புத்தகங்கள் இல்லாதது வருத்தத்தை தருகிறது. நாளை மறுநாள் பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படி கொடுத்தால்வரவேற்போம்.சமச்சீர் கல்வி சர்ச்சைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். ஒவ்வொருவருக்கும் உயர் கல்வி அவசியம். 31.3.2011 வரை ரூ.43 ஆயிரம் கோடி கடனாக தந்துள்ளோம். இன்னும் வரும் ஆண்டுகளில் ரூ.60 ஆயிரம் கோடி, ரூ.1 லட்சம் கோடியாக கல்வி கடன் உயரும். கல்வி கடன் திருப்பி செலுத்தப்படுவது 7 ஆண்டுக்கு பதில் 15 ஆண்டாக அறிவிக்கலாமா என்று நிதி அமைச்சர் ஆலோசித்து வருவதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||