கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான "ஸ்லெட்' தேர்வை ஏப்ரலில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் தகுதித் தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில் "ஸ்லெட்' என்ற மாநில அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
"நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். "ஸ்லெட்' தேர்வு மாநில அரசின் அனுமதியுடன், யுஜிசி ஒப்புதல் பெற்று நடத்தப்படும். தமிழகத்தில் சில ஆண்டுகளாக கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான குறைந்தபட்ச தகுதியாக முதுகலை பட்டப்படிப்பு, அது தொடர்பான பாடத்தில் எம்.ஃபில். பட்டமும் பெற்றிருந்தால் போதும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விரிவுரையாளர் பணிக்கு முதுகலை பட்டப் படிப்புடன் "நெட்' அல்லது "ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்றும், பி.எச்டி. முடித்தவர்களுக்கு மட்டும் இந்தத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு 11.7.2009-ல் வழிகாட்டு நெறிமுறை வகுத்தது. யுஜிசி-யும் இந்த புதிய நெறிமுறையைப் பின்பற்றி 30-6-2010 அன்று கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான புதிய விதிமுறையை வெளியிட்டது. ஆனால், 12-8-2010 அன்று விரிவுரையாளர் பணிக்கு நெட் அல்லது ஸ்லெட் தகுதி இல்லாத எம்.ஃபில். பட்டதாரிகளையும் நியமிக்க வகை செய்யும் வகையில் யுஜிசி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ளது.
பிஎச்டி பட்டம் முடிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகும் என்பதால், விரிவுரையாளராக நினைக்கும் முதுகலை பட்டதாரிகள் அனைவரும் தகுதித் தேர்வை எதிர்பார்த்து உள்ளனர். "நெட்' தேர்வைக் காட்டிலும் எளிதாக இருக்கும் என்பதால், இவர்களில் பெரும்பாலானோர் "ஸ்லெட்' தேர்வை எதிர்நோக்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக "ஸ்லெட்' தேர்வு நடத்தப்படாததால், முதுகலை பட்டதாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அண்மையில், தமிழக அரசு அனுமதி அளித்தும், யுஜிசி ஒப்புதல் கிடைக்காததால் தகுதித் தேர்வை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது என பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் "ஸ்லெட்' தகுதித் தேர்வை நடத்த யுஜிசி இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சி. சுவாமிநாதன் கூறியது: "ஸ்லெட்' தேர்வை நடத்த ஒப்புதல் பெறுவதற்காக பல்கலைக்கழக அதிகாரிகள் யுஜிசி அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்தனர். இதன் மூலம் தேர்வை நடத்த யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இந்த வார இறுதியில் கிடைத்து விடும். பல்கலைக்கழக முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் வரை நடைபெறும். எனவே, "ஸ்லெட்' தேர்வை மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான அறிவிப்பு பல்கலைக்கழக இணைய தளத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்படும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு "ஸ்லெட்' தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||