"மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு வீடு வீடாக வரும் அலுவலர்களுக்கு, ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: இந்தியா முழுக்க ஒரே காலகட்டத்தில், 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, நாளை (9ம் தேதி) துவங்குகிறது. இந்த மாதம் 28ம் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும். சென்னை மாநகர பகுதியில், மாநகராட்சி கமிஷனர் முன்னிலையில், கணக்கெடுப்பு பணி நடைபெறும். தமிழகம் முழுவதும், 150 நகராட்சிகளில், அந்தந்த நகராட்சி கமிஷனர்களின் பொறுப்பில், கணக்கெடுப்பு பணி நடக்கும். மற்ற இடங்களில், வட்டாட்சியர்களின் மேற்பார்வையில் நடக்கும். ஒட்டு மொத்த கணக்கெடுப்பு பணி, அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பில் நடைபெறும். முதற்கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில், வீட்டுப் பட்டியல், வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிக்கப்பட்டது. எங்கெங்கு மக்கள் வசிக்கின்றனர், எவ்வளவு வீடுகள், மின்சார வசதி, குடிநீர் வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும். 21 நாட்களில் கணக்கெடுப்பு பணி முடிக்க வேண்டும்; கால நீடிப்பு இருக்காது. தமிழகம் முழுவதும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு, மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் என 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுவர்.
கணக்கெடுப்பு பணி புரியும் ஒரு நபர் அதிகபட்சமாக 200 குடும்பங்களை கணக்கெடுக்கும் வகையில், ஈடுபடுத்தப்படுவர். எட்டு பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு படிவமும், அதற்கு மேல் நபர்கள் இருந்தால், கணக்கெடுப்பாளர் கூடுதலாக மற்றொரு படிவத்தை உபயோகப்படுத்திக் கொள்வார். பெயர், பிறந்த தேதி, திருமணமானவரா போன்று 29 வகையான தகவல்களை சேகரிப்பர். மாற்றுத் திறனாளிகள் எவ்வளவு பேர் உள்ளனர்; அவர்களுக்கு எந்த வகையில் பாதிப்பு போன்ற விவரங்களும் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பு பணி நடக்கும் சமயத்தில், புதிதாக ஒருவர் வந்திருந்தால், அவர் எங்கிருந்து வந்தார்; எவ்வளவு நாட்கள் தங்குவார் போன்ற தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள யாராவது வெளியூரில் இருந்தால், அவர் பெயர் சேர்க்கப்பட மாட்டாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் ரகசியமாக வைக்கப்படும். தயக்கமில்லாமல், அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்.
கணக்கெடுப்பு பணிக்கு பெரும்பாலும், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்களிடம் தகவல்களை தெரிவிக்க வேண்டாம். குறிப்பிட்ட சில நாட்களுக்குள், கணக்கெடுப்பு பணியாளர் வரவில்லை என்று தெரிந்தால், மாநகராட்சியின் புகார் எண் 1913ஐ தொடர்பு கொண்டு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட பகுதி, கணக்கெடுப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும். மற்ற இடங்களில் பொதுமக்கள், நகராட்சி கமிஷனர்களிடமும், தாசில்தார்களிடமும் புகார் தெரிவிக்க வேண்டும். சென்னையை பொறுத்தவரை கணக்கெடுப்பு பணிக்கு, மேற்பார்வையாளர்கள் கணக்கெடுப்பாளர்கள் என 9,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில், சில பள்ளி நிர்வாகம், மத்திய அரசில் பணி புரியும் ஊழியர்கள் கணக்கெடுப்பு பணிக்கு வர மறுத்தனர். கணக்கெடுப்பு பணி குறித்து அவசியத்தையும், சட்ட திட்டங்களையும் விளக்கிய பின், கணக்கெடுப்பு பணிக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுப்பு பணிக்கு வரும் அலுவலர்களுக்ககு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து தகவல்களை தெரிவிக்க வேண்டும். ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் இறுதி நாளான பிப்ரவரி 28ம் தேதி, மாலை 6 மணிக்கு மேல், வீடற்றவர்கள், மற்றும் நடைபாதைகளில் வசிப்பவர்களின் விவரங்கள் சேரிக்கப்படும். இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் 29 கேள்விகள்: நாளை துவங்கும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள், பிப்., 28 வரை நடைபெறுகிறது. வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்கள் பொதுமக்களிடம் கேட்கும் 29 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.
அவை: 1. பெயர், 2. குடும்ப தலைவருக்கு உறவு முறை, 3. இனம், 4. பிறந்த தேதி மற்றும் வயது, 5. தற்போதைய திருமண நிலை, 6. திருமணத்தின் போது வயது, 7. மதம், 8. ஷெட்யூல்டு வகுப்பு/ ஷெட்யூல்டு பழங்குடி, 9. மாற்றுத் திறன் (ஊனம்), 10. தாய்மொழி, 11, அறிந்த பிற மொழிகள், 12. எழுத்தறிவு நிலை, 13. கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை. 14. அதிக பட்ச கல்வி நிலை, 15. கடந்த ஆண்டில் எப்பொழுதாவது வேலை செய்தாரா. 16. பொருளாதார நடவடிக்கையின் வகை, 17. நபரின் தொழில், 18. தொழில், வியாபாரம், சேவையின் தன்மை, 19. வேலை செய்பவரின் வகை, 20. பொருளீட்டா நடவடிக்கை, 21. வேலை தேடுகின்றாரா, வேலை செய்ய தயாரா, 22. பணி செய்யும் இடத்திற்கு பயணம், 23. பிறந்த தேதி, 24. கடைசியாக வசித்த இடம், 25. இடப்பெயர்ச்சிக்கான காரணங்கள், 26. நகரத்தில் இடப்பெயர்ச்சிக்கு பின் வசித்து வரும் காலம், 27.உயிருடன் வாழும் குழந்தைகள், 28. உயிருடன் பிறந்த குழந்தைகள், 29. கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகள். கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கான பதில்களை முன்னதாகவே தயாராக வைத்திருந்து, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||