கல்வியில் பின் தங்கிய தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மத்திய அரசு திட்டத்தின் கீழ், தலா மூன்று கோடி ரூபாய் செலவில் 18 மாதிரிப் பள்ளிகள் கட்டும் பணி துவங்கியுள்ளது. இரண்டாவது கட்டத்தின் கீழ், 78 கோடி ரூபாய் செலவில், மேலும் 26 மாதிரிப் பள்ளிகளை கட்டவும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ஆர்.எம்.எஸ்.ஏ., (ராஷ்ட்ரிய மத்திய மிக் சிக்ஷா அபியான்) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மாதிரிப் பள்ளிகள் அமைப்பது முக்கியத் திட்டமாக உள்ளது.
கல்வியில் பின் தங்கியுள்ள தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், ஈரோடு, கரூர், நாமக்கல், சிவகங்கை, திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன், 18 மாதிரிப் பள்ளிகளை துவக்கிட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியும் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், தற்காலிகமாக அருகில் உள்ள அரசு பள்ளிகளில், ஆற முதல் ஓன்பது வரையிலான வகுப்புகளும், பிளஸ் 1 வகுப்பும் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளும் துவக்கப்படும். முழுக்க, முழுக்க ஆங்கில வழிக் கல்வியில் பள்ளியை நடத்திட மத்திய அரசு உத்தரவிட்டிருந்தாலும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மட்டும் ஆங்கில வழியுடன் தமிழ் வழிக் கல்வியும் நடத்தப்பட்டு வருகின்றன.
காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தின் மூலம், 10 மாதங்களில் மாதிரிப் பள்ளிகளை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு, கடந்த வாரம் பூமி பூஜை நடந்தது. கட்டுமானப் பணிகள் முடிந்ததும், புதிய பள்ளிகளுக்கு மாதிரிப் பள்ளிகள் மாற்றப்படும் என்று, துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதியான ஆசிரியர்கள், சிறப்பான கட்டடம், விளையாட்டு மைதானம், "லேப்' வசதிகள், கைத் தொழில்களை கற்பதற்கான தனி வசதிகள், இணைய தள வசதியுடன் கல்வி கற்கும் வசதிகள், இலக்கியம், அறிவியல், கணிதம் ஆகியவற்றில் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக தனித் தனி மன்றங்கள் என, பல்வேறு வசதிகளுடன் மாதிரிப் பள்ளிகள் கட்டப்பட உள்ளன.
முதல் திட்டத்தின் கீழ் 18 பள்ளிகள் கட்டி முடிக்கப்பட்டதும், இரண்டாவது கட்டமாக, 78 கோடி ரூபாய் செலவில் 26 பள்ளிகள் கட்டப்பட உள்ளன. இதற்கான இடங்களையும், பள்ளிக் கல்வித்துறை தேர்வு செய்துள்ளது. இந்தப் பள்ளிகள், அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய தலைமை இடங்களிலேயே அமைகின்றன.இந்த 44 பள்ளிகளும் முழுமையான அளவில் இயங்கும் போது, அதன் சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், தரமான கல்வியை பெறக் கூடிய நிலை ஏற்படும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஆசிரியர்களுக்கு நாளை, "கவுன்சிலிங்' : அரசு பள்ளிகளில் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள், கூடுதல் பணியாக மாதிரிப் பள்ளிகளில் தற்போது பணி புரிந்து வருகின்றனர். மாதிரிப் பள்ளிகளுக்கென தனியாக, ஆசிரியர்களை நியமனம் செய்திடும் வகையில், நாளை 10 மாவட்ட தலை நகரங்களில் கவுன்சிலிங் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு மூலம் தேர்வாகி, அரசு பள்ளிகளில் பணி புரிந்து வருபவர்கள் மற்றும் அம்மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் பணியாற்றி வருபவர்கள் மட்டும், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வான ஆசிரியர்கள், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் 17 ஆசிரியர்களை தேர்வு செய்ய, இந்த கவுன்சிலிங் நடக்கிறது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||