கே. வாசுதேவன்
நாளுக்குநாள் புதிய பெயர்களுடன் உலா வரும் நோய்களுக்கு ஏற்றார்போல, மருத்துவத் துறையில் அவற்றைக் கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அண்மைக்காலமாக மருத்துவத் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் "ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம் பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.
எலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, விழி வெண்படலம், ரத்தம், பல், கல்லீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து "ஸ்டெம்செல்'கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மனித உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் "ஸ்டெம்செல்'களைச் செலுத்துவதன் மூலம் அந்த நோய் பாதிப்பில் இருந்தும், அதனால் ஏற்பட்ட சேதத்தில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்பட்டு வருகிறது.
"ஸ்டெம்செல்' சிகிச்சை மருத்துவத் துறையில் ஒரு புரட்சியாகவும், மனித வாழ்வுக்கு மறுமலர்ச்சியைத் தந்து வியத்தகு வளர்ச்சியை அடைந்து வருகிறது.
"ஸ்டெம்செல்' சிகிச்சை இப்போது நீரிழிவு நோய், நிணநீர் மண்டலப் புற்றுநோய், மூளைக்கட்டி, இதய நோய், முதுகுத் தண்டுவட பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்னை உள்ளிட்ட 85-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு நிரந்தரத் தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.
"ஸ்டெம்செல்'லின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, இப்போது பெண்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தக் கழிவுகளில் இருந்து "ஸ்டெம்செல்'களைப் பிரித்தெடுத்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கவும் மருத்துவத் துறை பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
"ஸ்டெம்செல்' குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையத் தொடங்கியுள்ளது. இதனால், "ஸ்டெம்செல்'களை அதற்குரிய "ஸ்டெம்செல்' வங்கிகளில் சேமித்து வைப்பது அதிகரித்து வருகிறது.
இப்போது தொப்புள் கொடியில் இருந்தும், எலும்பு மஜ்ஜையில் இருந்தும் எடுக்கப்படும் "ஸ்டெம்செல்'களைச் சேமித்து வைப்பதே அதிகமாக உள்ளது. இந்த வகை "ஸ்டெம்செல்'களைச் சேமித்து வைக்க தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகள் ரூ. 25 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கின்றன. இக் கட்டணத்தை சில தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகள், தவணை முறையிலும் வசூலிக்கின்றன. அதேவேளையில் "ஸ்டெம்செல்' மூலம் சிகிச்சை பெறுவதற்குரிய வழிமுறைகளையும், இந்த வங்கிகளே செய்து கொடுக்கின்றன.
இதன் காரணமாக நடுத்தர மக்களும் "ஸ்டெம்செல்'களை, தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகளிடம் சேமித்து வைக்கும் பழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, மாநிலத்தில் தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. "ஸ்டெம்செல்' மூலம் வருங்காலத்தில் மேலும் பல நோய்களுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை ஏற்படும்போது "ஸ்டெம்செல்' மூலம் இப்போது அடையும் பயனைவிட, எதிர்காலத்தில் அதிகப்படியான பயன்களை மக்கள் அடைய முடியும்.
ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில், "ஸ்டெம்செல்' சேமித்து வைக்கத் தனியார் நிறுவனங்கள் மட்டுமே "ஸ்டெம்செல்' வங்கிகளை உருவாக்கி வருகின்றன. இதுவரை அரசு எங்கேயும் "ஸ்டெம்செல்' வங்கிகளை உருவாக்கவில்லை. பல ஆயிரம் கோடியில் சுகாதாரத் திட்டங்களையும், காப்பீட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தும் தமிழக அரசு, இன்னும் "ஸ்டெம்செல்' வங்கியைத் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையைக்கூட எடுக்காமல் இருப்பது மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
அரசே பல இடங்களில் "ஸ்டெம்செல்' வங்கிகளைத் தொடங்கும்பட்சத்தில், நடுத்தர மக்களை மட்டுமன்றி, ஏழைகளையும் இது சென்றடையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேநேரத்தில், தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகளில் கட்டணம் பல மடங்கு குறைய வாய்ப்பு உள்ளது.
"ஸ்டெம்செல்' சிகிக்சையளிக்கும் வசதி தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில்தான் உள்ளது. இதில் 3 மருத்துவமனைகள் சென்னையில் உள்ளன. ஒரு மருத்துவமனை மட்டும் வேலூரில் உள்ளது. மாநிலத்தில் "ஸ்டெம்செல்' சேகரித்து வைத்திருப்போரின் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், அதன் மூலம் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தைத் தாண்டிச் செல்லவில்லை.
இந்தச் சூழ்நிலை மாற வேண்டும் என்பதே மருத்துவர்களுடைய கருத்தாக உள்ளது. "ஸ்டெம்செல்' சிகிச்சையை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எடுத்துக்கொள்ளக் கூடிய நிலையை அரசு உருவாக்க வேண்டும். இச் சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் "ஸ்டெம்செல்' சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அனைத்துத்தரப்பு மக்களிடம் இன்னும் பரவலாகவும், எளிதாகவும் சென்றடையும்.
அரசு இந் நடவடிக்கையை விரைவாக எடுக்கும்பட்சத்தில் நாளைய தலைமுறையை வளமிக்கதாக உருவாக்கும் காரியத்தைச் செய்ததோடு மட்டுமன்றி, இன்றைய தலைமுறையையும் நலமிக்கதாகவும் மாற்ற முடியும்.
Good news .
ReplyDeleteWish our GM takes appropriate action to open more banks in all districts for preserving the stemcell
ReplyDeleteMedias' should informative to get people familiar with this. - sunitha
ReplyDeletethank you for giving such a wonderful information about stem cell.
ReplyDeleteN.Kalyani.M.SC.,M.PHIL.,B.ED.,
B.T. ASST