கவிஞர்கள் பலர் முத்துக்களைப் பற்றி வர்ணித்திருக்கிறார்கள். அது கடலின் ஆழத்தில் விளைகிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை.
பிங்டெடா பூயூகோட்டா |
மனிதனுக்குத் தெரிந்த விலைமதிப்பற்ற, ஒப்பற்ற நவரத்தின கற்களின் வகைகளில் ஒன்றே முத்துச் சிப்பி. குர்ஆன், பைபிள், மற்றும் வேதங்களிலும் முத்துக்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சிப்பிக்குள் விலை மதிப்பற்ற முத்துக்கள் உருவாகும் விதங்கள், சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது: ""சிப்பிகளும் ஒரு விலங்கினம் எனலாம். இதன் அறிவியல் பெயர் பிங்டெடா பூயூகோட்டா . தமிழகத்தில் மன்னார் வளைகுடா, குஜராத்தில் கட்ச் வளைகுடா கடல்பகுதிகளில்தான் அதிகமான முத்துக்குளிப்பு நடந்து வந்தது.
கடலில் மூழ்கிச் சென்று முத்துச்சிப்பிகள் சேகரிப்பதையே முத்துக்குளித்தல் என்கிறார்கள். மன்னார் வளைகுடா கடல்பகுதியில் பாம்பன் முதல் மணப்பாடு வரை கடலில் 160 கி.மீ.தூரம் வரை 600 வகையான முத்துச்சிப்பி படுகைகள் இருந்தாலும் 6 வகைகள்தான் இப்போது இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை இவற்றின் வளர்ச்சிக் காலமாக இருப்பதால் அலைகள் குறைந்தும் கடல் தெளிந்தும் இருக்கும்போது முத்துக்குளிப்பு நடைபெறும். இக்காலங்களில்தான் குறைந்தபட்சம் 2 லட்சம் முத்துச்சிப்பிகள் வரை சேகரித்துள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளிப்பின் மையமாக விளங்கியது தூத்துக்குடி. அதன் காரணமாக இந்த நகருக்கு முத்து நகர் என்ற பெயரும் வந்தது. கடலில் உள்ள முத்துச்சிப்பி படுகைகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தம் என்பதால் முத்துக்களின் வளமும், முத்துக் குளிப்பும் மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 10-20 கி.மீ. தூரத்தில் 15-25 கி.மீ. ஆழம் வரை இலை வடிவத்தினாலான முத்துச்சிப்பிப் படுகைகள் தென்படும். கடலுக்கு அடியில் உள்ள பாறைகள், முத்துச்சிப்பிகள் அதில் ஒட்டி வளர பேருதவியாக இருக்கின்றன.
மன்னார் பகுதியில் சேறு அதிகம் இல்லாததால் கடல் நீர் கலங்கவோ, சிப்பிகளின் வளர்ச்சி குறையவோ வாய்ப்பில்லை. சிப்பிகளுக்குத் தேவையான இயற்கை தாவர நுண்ணுயிரிகள்,ஆக்சிஜன் ஆகியனவும் முத்துச்சிப்பி படுகைகள் வளமுடன் அமைவதற்கு ஏற்ற வாய்ப்பாகவும் உள்ளது.
சிப்பிக்குள் முத்து உருவாவதைப் பற்றி பல மூட நம்பிக்கை கதைகள் அதிகமாக அலைந்து கொண்டிருந்தாலும் உண்மையில் முத்து உருவாவது அதன் உட்கரு நுழைவதைப் பொறுத்தே அமையும். எல்லாச் சிப்பிகளிலும் முத்து இருப்பதில்லை. எந்தச் சிப்பியில் முத்து இருக்கும் எதில் இருக்காது என்பதையும் யாரும் அறிய முடிவதில்லை. சிப்பிக்குள் ஏதேனும் ஒரு வேற்றுப் பொருள் சிப்பிகளுக்குள் நுழைந்து உட்கருவாக செயலாற்றி அதனை சுற்றி நேக்ரி எனப்படும் பொருளை உற்பத்தி செய்து மூடி அதில் உருவாகும் மாந்தில் என்ற ஒரு திரவத்தின் மூலமாகத்தான் முத்து உருவாகும். இவ்வாறு இயற்கையாகவே சிப்பிகளுக்குள் முத்துக்கள் தோன்றி முத்துச் சிப்பிகளாகிவிடுகின்றன.
கடல் மாசுபடுதல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் இதன் வளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முத்துச்சிப்பி படுகைகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்துக் குளித்திட முடியும். ஆனால் 1961}க்குப் பிறகு முத்துக்குளிப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. தற்போது மன்னார் வளைகுடாவில் முத்துச்சிப்பிகளே இல்லை எனும் நிலையில் கடலின் இயற்கை வளம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவும் அரியவகை கடல் வாழ் உயிரினங்களில் உள்ள விலை மதிப்பற்ற விநோத ஜீவன்.
Thanks for your service
ReplyDelete