""மொபைல் போன் வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணை மாற்றாமல், விரும்பிய மொபைல் நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளும் வசதி நவம்பர் முதல் வாரத்தில் அமலுக்கு வரும். "2ஜி' லைசென்ஸ் பெறுவதற்காக புதிய கட்டணம் இரண்டு வாரத்தில் நிர்ணயிக்கப்படும்,'' என டிராய் தலைவர் சர்மா கூறினார்.
நாட்டில் தூர்தர்ஷன் மற்றும் ஆறு தனியார் நிறுவனங்கள், டி.டி.எச்., சேவையை வழங்கி வருகின்றன. இதில் 2.1 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ஒரே "செட்டாப் பாக்ஸ்' மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் டி.டி.எச்., சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் புதிய நடைமுறையை அமல்படுத்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டி.டி.எச்., சேவை நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் (டிராய்) ஒப்படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, "டிராய்' நடத்திய கருத்துக் கேட்பு கூட்டம் சென்னை அண்ணா சாலை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் நடந்தது. டிராய் தலைவர் சர்மா தலைமை வகித்தார். செயலர் அர்னால்டு, ஆணைய உறுப்பினர் அசோக், டி.டி.எச்., சேவை நிறுவன பிரதிநிதிகள், ஏஜன்சிகள், நுகர்வோர் அமைப்பினரும் இதில் பங்கேற்றனர்.
நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த சரவணன் பேசும்போது, ""வாடிக்கையாளர்களின் உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில், இதை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போதுள்ள "செட்டாப் பாக்ஸ்'களில் இதை நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை. இலவசம் என்ற பெயரில் சேவை நிறுவனங்கள் மறைமுக வரி விதிக்காமல் இருக்க வேண்டும்,'' என்றார். மற்றொரு நுகர்வோர் முருகன் பேசும்போது,""இது தொடர்பாக கோர்ட்டில் உள்ள வழக்கு முடிந்ததும் தான் இதை நடைமுறைப்படுத்த முடியும். நுகர்வோர் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது,'' என்றார்.
"செட்டாப் பாக்ஸ்' சேவை நிறுவன பிரதிநிதிகள் பேசும்போது,""அவசரகதியில் இதை நடைமுறைப்படுத்தக் கூடாது. கால அவகாசம் அளிக்க வேண்டும். ஒரே "செட் டாப் பாக்சில்' வாடிக்கையாளர் விரும்பும் சேவை நிறுவனத்தை தேர்வு செய்யும் நடைமுறை சரியாக இருக்காது. போட்டி நிறைந்த வர்த்த உலகில், சந்தையை பெரிதும் பாதிக்கும். ""ஏற்கனவே நாங்கள் ஆன்-லைன் மூலமாக தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளோம். நுகர்வோர் எந்த அளவில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை அறியாமல், திடீரென இதை அமல்படுத்துவது சிக்கலை ஏற்படுத்தும்,'' என்றனர்.
இதற்கு பதில் அளித்த டிராய் தலைவர் சர்மா,""வெளிநாட்டுக்கு போகக் கூடாது என தடைபோட்டுவிட்டு, வெளிநாட்டுக்கு போக யாருக்கும் ஆர்வம் இல்லை என்று சொல்ல முடியாது. வெளிநாடுக்கு போகலாம் என அறிவித்தால்தான், எவ்வளவு பேர் போகிறார்கள் என தெரியும்,'' என்றார். சார்ப்ட்வேர் இன்ஜினியர்கள் பேசும்போது, ""இந்த நடைமுறையை அமல்படுத்துவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. தொழில்நுட்ப வசதிகள் அதீத வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், இது சாத்தியம்தான்,'' என்றனர்.
கருத்துக் கேட்புக்கு பின், டிராய் தலைவர் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது: பரிந்துரை, விதிமுறைகள் குறித்து நிர்ணயம் செய்ய கால நிர்ணயம் ஏதும் இல்லை. இருந்தபோதிலும் விரைவில் அது தொடர்பான அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்போம். "2ஜி' அலைவரிசை லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணம் 2001ல் நிர்ணயிக்கப்பட்டு, அப்படியே உள்ளது. இரண்டு, மூன்று வாரத்திற்குள் புதிய கட்டண நிர்ணயம் செய்யப்படும். மொபைல் போன் வாடிக்கையாளர்கள், அதே எண்ணில் விரும்பிய நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி நவ., முதல் வாரத்தில் அமலுக்கு வரும். இவ்வாறு சர்மா கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||