உலகில் எத்தனையோ ரகங்களில் பழங்கள் உள்ளன. இவற்றில் மனிதர்கள் உண்ணக் கூடியவை, உண்ணக் கூடாதவை, மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை என பல வகைகள் உள்ளன.
இத்தகைய பிரிவுகளில் ஒன்றுதான் வெல்வெட் ஆப்பிள். பிலிப்பைன்ஸ் நாட்டை தாயகமாகக் கொண்ட இந்த வெல்வெட் ஆப்பிள் கமாகோங், மபோலா, வெல்வெட் பெர்சிமன், கொரியன் மாங்காய், ஜப்பானிய ஆப்பிள் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய்க்கும், வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கும் இப்பழம் மட்டுமின்றி இதன் இலைகள், தண்டு ஆகியவையும் பயன்படுவதால் மருத்துவ உலகிலும் இப்பழத்திற்கு சிறந்த மதிப்பு உள்ளது.
""எபினேசிய தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த வெல்வெட் ஆப்பிள் பழங்கள் பீச்சஸ் பழங்களின் சுவையை ஒத்திருக்கும். இப்பழத்தினை பிரித்தவுடன் பாலாடைக் கட்டியின் மணத்தைப்போல மணம் வீசும். அதனால் பாலாடைக் கட்டியைப் பிடிக்காதவர்களுக்கு இப்பழத்தையும் அவ்வளவாகப் பிடிக்காது'' என்கிறார் உதகையிலுள்ள தாவரவியல் நிபுணர் டாக்டர் வி.ராம்சுந்தர்.
நீலகிரி மாவட்டத்தில் பர்லியார் மற்றும் கல்லார் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இந்த வெல்வெட் ஆப்பிள் பழத்தைக் குறித்து நம்மிடம் மேலும் அவர் கூறியது:
வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலப் பயிரான வெல்வெட் ஆப்பிள் மரம் சுமார் 100 அடி உயரத்துக்கும் மேல் வளரக் கூடியவையாகும். இம்மரம் மிகவும் உறுதியான தன்மையைக் கொண்டதால் ஃபர்னீச்சர் உலகிலும் இம்மரத்துக்கு நல்ல மதிப்புள்ளது. வயிற்றில் உபாதைகள் ஏற்பட்டால் முழுமையாக பழுக்காத வெல்வெட் ஆப்பிள் பழங்களை உண்டால் உடனடியாகத் தீர்வு கிடைக்குமென்பது மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
அதேபோல, இதன் இலைகளிலிருந்து சாறு பிழிந்து கண்களின் மேல் கட்டிக் கொண்டால் கண் பார்வை தெளிவடையும் என்பது வங்கதேசத்தவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் இம்மரத்துக்கு வங்கதேசத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. இம்மரத்தின் பட்டை மற்றும் வேர் ஆகியவையும் அங்கு முக்கிய மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.
பழங்கள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம் என்கின்றன நீலகிரியின் பழவகைகள். அதிலும் இந்த வெல்வெட் ஆப்பிள் பழம் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.
வெல்வெட்ஆப்பிள் ஒரு வெல்வெட் தகவல்
ReplyDeleteRajakumar
Villupuram