"நாங்களே டீச்சர் ஆயிட்டோம்ல...!' ஹிபானா (4ம் வகுப்பு): இந்த படிப்பு ரொம்ப பிடிச்சுருக்கு. ஒவ்வொரு படியாக ஏறி செல்வதில் உள்ள போட்டி பிடித்திருக்கிறது. டீச்சர் வரவில்லை என்றால் சிறு வகுப்பு குழந்தைகளுக்கும் டீச்சர் மாதிரி நாங்களே சொல்லித் தருகிறோம். இதனால் நாங்கள் படித்தது மறக்கவே மறக்காது.- இப்படிச் சொல்வது யார் தெரியுமா? கோவையில் செயல்வழி கல்வித் திட்டம் மூலம் பாடம் பயிலும் மாணவி தான்!அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்வழி கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறைகளின் சிறந்த தரம், துவக்க வகுப்புகளில் ஆங்கில பயிற்சிக்கு அளிக்கும் அதிக முக்கியத்துவம் காரணமாக, தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு மாறும் ஆரோக்கியமான சூழல் உருவாகியுள்ளது.
தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்வழி கற்றல் (ஏ.பி.எல்.,) மற்றும் படைப்பாற்றல் (ஏ.எல்.எம்.,) கல்வி முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களை மையமாக கொண்டிருப்பதே இக்கல்வி முறைகளின் சிறப்பு.
ஆசிரியர்கள் மட்டுமே கற்பிப்பது இங்கு நிகழ்வதில்லை. ஆசிரியர்களின் உதவியுடன் தாங்களாகவே மாணவர்கள் பாடங்களை கற்று கொள்ள முடிகிறது.வண்ணமயமான எழுத்து அட்டைகள், பொம்மலாட்டம், வில்லு பாட்டு ஆகியவற்றின் உதவியுடன், சமுதாய விழிப்புணர்வு பாடங்களை கற்று கொள்கின்றனர். விளையாட்டு போல் சிறு, சிறு குழுக்களாக பாடங்களை பகிர்ந்து கற்பதால் கற்றல் எளிதாகிறது.மெட்ரிக் பள்ளி சங்க கூட்டங்களில் பங்கேற்கும், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர்கள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இப்புதிய கல்வி முறைகளின் சிறப்புக்கள் பற்றி, "சிலைடு ÷ஷா' நடத்தி விளக்கி வருகின்றனர். இதனால் ஈர்க்கப்பட்ட பல மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள், ஏ.பி.எல்., கல்வி முறையை தங்கள் பள்ளிகளிலும் அமல்படுத்த அனுமதி கேட்டு வருகின்றனர்.இதன் விளைவாக கர்நாடக மாநில பள்ளிகளில் இக்கல்வி முறை "நல்லி ஹள்ளி' எனும் பெயரில் அறிமுகமாகியுள்ளது. சத்திஸ்கர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. சீன நாட்டு கல்வியாளர்களும் சமீபத்தில் கோவை அரசு பள்ளிகளை பார்வையிட்டு பிரமித்து சென்றனர்.இதன் உச்சகட்டமாக, சமீபத்தில் தமிழக பள்ளிகளை பார்வையிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், புதிய கல்வி முறையை புகழ்ந்து தள்ளியதோடு, பிற மாநிலங்களிலும் பின்பற்ற பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய கல்வி முறைகளின் சிறப்புக்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்த பொதுமக்கள், சமீபகாலமாக தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க துவங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஒன்றியத்தை சேர்ந்த பொங்குச்சிபாளையம், ராமநாதபுரம், தொட்டகாலம்புதூர், பெரிய குரும்பபாளையம், சூலூர் ஒன்றியத்தை சேர்ந்த எம்.கணபதிபாளையம், இலச்சிபாளையம், பல்லடம் ஒன்றியத்தை சேர்ந்த கள்ளம்பாளையம்புதூர், காரமடை ஒன்றியத்தை சேர்ந்த சின்னகல்லிபட்டி, நெல்லித்துறை, சுல்தான்பேட்டை எஸ்.அய்யம்பாளையம், வதம்பசேரி ஆகிய பல்வேறு ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 50 தனியார் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாக, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் பட்டியல் அளித்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கோவை மாவட்ட உதவி திட்ட அலுவலர் காளியப்பன் கூறியதாவது:தனியார் பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் அரசு பள்ளிக்கு வருவது உண்மை தான். நிறைய ஒன்றியங்களிலிருந்து இது குறித்து ஆசிரியர் பயிற்றுனர்கள் ரிப்போர்ட் செய்து வருகின்றனர். தங்கள் குழந்தைகள் "மம்மி, டாடீ' என அழைப்பதை கேட்க விரும்பும் பெற்றோரில் பலர், ஆர்வமுடன் முதலில் தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். அதிக கல்வி கட்டணம், அதிக பாடங்கள் ஆகிய சுமைகளுடன் இரண்டாவது குழந்தையும் பிறந்தவுடன் சமாளிக்க முடிவதில்லை.தரமான கல்வியை இலவசமாக கற்று தரும் அரசு பள்ளிகளை தேடி ஓடி வருகின்றனர். திடீரென அரசு பள்ளியில் சேர்ப்பதால் ஏற்படும் சூழல் மாற்றம் காரணமாக, தமிழ்வழி கல்வியில் மாணவனால் மனதை செலுத்த முடியாது. படிப்படியாக அடுத்த வகுப்புகளிலும் படிப்பில் பின் தங்கி விடுகிறான்.இவ்வாறு அரைகுறையாக ஆங்கிலம் கற்று சிரமப்படுவதை விட, முதல் வகுப்பிலேயே அரசு பள்ளிகளில் சேர்ப்பது தான் புத்திசாலித்தனம். அரசு பள்ளிகளில் துவக்க வகுப்புகளிலேயே இப்போது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், ஆங்கில கல்வி பற்றி கவலை தேவையில்லை.பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி, "ஹலோ இங்கிலீஷ்' ஆங்கில "டிவிடி'க்கள் மூலம் ஆங்கிலத்தில் பேசும் திறன் வளர்ப்பு, ஆங்கில "ரைம்ஸ்' கற்பித்தல் என தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளை விட, இன்று அரசு ஆரம்ப பள்ளிகள் அதிக தரமுடன் உள்ளன.ஆங்கில கல்விக்கு வகுப்பறையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் முதல் வகுப்பு மாணவர்கள் கூட, மே ஐ கமின் டீச்சர், ஹெள ஆர் யூ, ஐயாம் பைன், வேர் ஆர் யூ கோயிங்' என்றெல்லாம் ஆங்கிலத்தில் அனாயாசமாக பேசுகின்றனர்.இவ்வாறு காளியப்பன் கூறினார்.
இவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை விளக்கும் வகையில் இதோ இந்தக் குழந்தைகள்:
வி.ஜானகி, மதுரை என்.எம்.ஆர்., சுப்பராமன் நினைவு பள்ளி ஆசிரியை:மாணவர்களுக்கு படிநிலைகளின் அடிப்படையில், அட்டைகள், படங்களை வைத்து, தரையில் அமர்ந்து கற்பதால் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவது, மிகுந்த பலன் தருகிறது. புத்தகங்களின் மூலம் கற்றபோது, விடுப்பில் செல்லும் மாணவர்களின் கற்றல் விடுபட்டு போனது; சில மாணவர்கள் ஒதுங்கியும் விடுவர்.ஆனால் இம்முறையில், விடுபட்ட இடத்தில் இருந்து படிப்பை தொடர முடிவதும், ஒவ்வொரு மாணவர் மீதும் ஆசிரியரின் கவனம் இருப்பதும் கற்றலில் அரிய வாய்ப்பாகும். இதனால் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் இடைவெளி ஏற்படாது.
மூர்த்திராஜன், ராஜபாளையம் ஜமீன் கொல்லங்கொண்டான் நாடார் துவக்கப் பள்ளி ஆசிரியர்: பழைய கல்வி முறையில் புத்தகச் சுமை அதிகமாக இருந்தது. ஆசிரியர் - மாணவரிடையே இடைவெளி இருந்தது. இப்போது, சிறுவர்களோடு சிறுவர்களாக அவர்களுடன் அமர்ந்து கற்றுக் கொடுப்பதால், எங்களது கற்பிக்கும் திறன் மேம்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்த முடிகிறது.
கடலூர் ஸ்ரீஜெயலட்சுமி கமிட்டி பள்ளித் தலைமை ஆசிரியை மல்லிகா:முன்பெல்லாம், ஒரு பாடத்தை நடத்தி விடுவதோடு சரி. மாணவன் படிக்கிறானா, இல்லையா என தனித் தனியாக பார்ப்பதில்லை. தற்போதைய செயல்வழி கற்றலில், 1வதுக்குரிய அட்டையை முடித்தால் தான், அடுத்த வகுப்பிற்கான அட்டைக்கு செல்ல முடியும்.மேலும், ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனி கேள்வித் தாள் வழங்கப்படும். முதல் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு சிவப்பு நிறமும், 2வதுக்கு பச்சையும், 3வதுக்கு நீல நிறமும், 4ம் வகுப்பிற்கு மஞ்சள் நிறமும் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் ஏமாற்றுவதற்கு வழியில்லை. ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையுடன் மாணவர்கள் படிப்பதைப் பார்க்க முடிகிறது.
கடலூர், வேணுகோபாலபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் துரை:இந்தத் திட்டத்தில் அரசு கொடுக்கும் புத்தகத்திற்கும், அட்டைக்கும் ஒற்றுமையில்லாமல் உள்ளது. அதை அரசு மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இல்லாத குறையும் உள்ளது. குறைபாடுகளை அகற்றினால் பிற்காலத்தில் மாணவர்களுக்கு சிறந்த திட்டமாக இருக்கும்.
விழுப்புரம், நாட்டார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கிராம கல்விக்குழு தலைவர் இளங்கோ:செயல்வழி கற்றல் முறை இதுவரை இருந்து வந்த மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாறுபட்டுள்ளது. மாணவர்களிடம் தேர்வு பயம் இல்லை, குழுவாக சேர்ந்து படிப்பதால் ஒற்றுமையை வளர்க்க உதவி செய்கிறது.எனினும், பெற்றோருக்கு எதுவும் புரியவில்லை. மாணவர்களின் தரம் என்ன, வகுப்பில் எத்தனாவது மாணவனாக உள்ளான் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. குறைவான மாணவர்கள் இருக்கும் போது திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் ஆசிரியர்கள் சரியாக கவனம் செலுத்த முடியாது.
புதுச்சேரி பீச்சவீரன்பேட்டிலுள்ள பி.ஆர்.அம்பேத்கர் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் கணேசன்:ஏ.பி.எல்.,திட்டத்தின் பணியாற்றும் ஆசிரியர்களை அடிக்கடி பணிமாற்றம் செய்யாமல் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். பணியாற்றும் ஆசிரியர்கள் முழு மனதுடன் பணியாற்ற வேண்டும்.இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கு, அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் போதுமான அடிப்படை வசதிகளான, கழிப்பிட வசதி, குடிதண்ணீர் வசதிகளை செய்து தர வேண்டும்.
ஊட்டி மெயின் பஜார் நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேவன்: மாணவர்கள் தங்களுக்கான பாடங்களை அவர்களே தேர்வு செய்து, தாங்களே பாடங்களை பயில்கின்றனர். சுய தர மதிப்பீட்டை மாணவர்கள் செய்வதால், தாங்கள் எங்கே பின் தங்கியுள்ளோம் என்பது அவர்களுக்கு தெரிந்து, அந்த பாடத்தில் முன்னேற்றம் அடைய, ஆசிரியர் ஆலோசனை பெறப்படுகிறது. இதனால் கல்வி மட்டுமில்லாமல், பேச்சுத்திறன், வரையும் திறன் மற்றும் பிற திறமைகளை வளர்த்துக்கொள்ள முடிகிறது.நீலகிரியில் இந்த முறையில் ஒரு பின்னடைவு காலநிலை. செயல்முறை கல்வியில் மாணவர்களுடன் ஆசிரியர் தரையில் அமர்ந்து பாடம் நடத்த வேண்டும். இங்கே குளிரான காலநிலையால் மாணவர்கள் தரையில் அமர சிரமப்படுகின்றனர். மேலும் இந்த கல்வி முறை மூலம், 1ம் வகுப்பிலிருந்து 4ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்த வேண்டும். அதிகமான மாணவர்கள் இருந்தால் அனைத்து மாணவர்களிடமும் தனி கவனம் செலுத்த முடியாது.
வால்பாறை, உருளிக்கல் எஸ்டேட் எல்.டி., ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சந்திரா :கணித உபகரணங்களை கொண்டு பாடம் கற்பிப்பதால் எளிதில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று விடுகின்றனர்.
உடுமலை நெல்லுக்கடைவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலாவதி :செயல் வழிக்கற்றல் முறையினால், வகுப்பறைகளுக்கு வரும் மாணவர்கள் முதலில் ஆரோக்கிய சக்கரம், தன்சுத்தம் பேணுதல் அட்டையை பார்த்து தினசரி பின்பற்றும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பின், அவர்களே வருகையை பதிவு செய்யும் வகையிலுள்ள சுய வருகை பதிவேட்டில், பள்ளிக்கு வந்ததை பதிவு செய்கின்றனர்.
சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மணி:செயல்வழி கற்றல் பாடத்திட்டம் முழுமையாக செயல்படுத்தும் வகையில், வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என நியமித்தால், மேலும் சிறப்பாக பின்பற்ற முடியும்.
உமாதேவி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நல்லூர்:இந்த முறையினால், மாணவர்களின் கற்கும் திறன், முன் இருந்ததை விட 70 சதவீதம் அதிகரித்துள்ளது. நாளிதழ்களை கூட நான்காம் வகுப்பிலேயே வாசிக்கும் திறன் உருவாகுகிறது. சுதந்திரமாக செயல்பட முடிகிறது. மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக இந்த முறையிலும் மாணவர்கள் பாடம் கற்கின்றனர்.
கோவை சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னப்பொண்ணு மற்றும் ஆசிரியை உலகாம்பாள்: ஒரு சிறந்த கல்வி முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. பழைய கல்வி முறையில், மாணவர்கள் ஆசிரியர் அருகில் வரவே பயப்படுவர். இன்று தாங்களாகவே விரும்பி, சந்தேகங்களை தீர்த்துக் கொள்கின்றனர். ஆசிரியரின் கவனத்தை ஈர்க்க அவரது பெயரை சொல்லி கூட அழைக்கும் அளவுக்கு வகுப்பறை சுதந்திரத்தையும், தைரியத்தையும் இக்கல்வி முறை தந்துள்ளது.கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியை சுமதி: பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, வண்ணப் படங்கள், எழுத்துக்கள் அடங்கிய சிறு அட்டைகள் மூலம் இயல்பாக கற்பதால், மேலும் மேலும் கற்க மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். எதற்கும் பயன் இல்லாத மனப்பாட கல்வி முறை மாறி, புரிந்து படிக்கும் இக்கல்வி முறையால் தமிழக பள்ளிக் கல்வியின் தரம் உயரும்.உடுமலை அருகே சோமவாரபட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இந்தாண்டு, நாகதர்ஷினி மற்றும் கலைவாணி ஆகிய மாணவியர் சேர்ந்துள்ளனர். இவர்கள் தனியார் பள்ளியில் படித்து வந்தவர்கள். குழந்தைகளிடம் கேட்ட போது, "முன்பு படித்த தனியார் பள்ளிக்கு செல்லும் போது, வீட்டு பாடம், டியூஷன் என கடுமையாக இருந்தது. பாடங்களும் அதிகளவு இருந்தன. ஆனால், தற்போது படித்து வரும் அரசு பள்ளியில் விளையாட்டு முறையில் எளிதாக படித்து வருகிறோம்' என்றனர்.
தமிழ் பிரபாகரன் (5ம் வகுப்பு, கோவை மானியத் தோட்டம் அரசு மகளிர் நடுநிலைப்பள்ளி): "ஜாலி'யாக உட்கார்ந்து கலர் கலர் அட்டைகளை வைத்து படிப்பது பிடித்துள்ளது. முன் புத்தகம், வீட்டுப்பாடம் இருந்ததால் சிறிது கடினமாக இருந்தது.இப்போது ஸ்கூலுக்கு எப்போதுவருவோம் என்று இருக்கிறது.
தனியார் பள்ளிகள் ஆசிரியர்கள் என்ன சொல்கின்றனர்?
கோவை, எஸ்.பி.ஓ.ஏ., பிரைமரி பள்ளி முதல்வர் மகாலஷ்மி: அரசுப் பள்ளியில் அமல்படுத்தப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் கல்வி முறை, மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. வண்ண படங்கள், எழுத்துக்களால் ஈர்க்கப்படும் குழந்தைகள் ஆர்வமுடன் கற்கின்றனர். எங்கள் பள்ளியில் அதே போன்ற வண்ண அட்டைகள் இல்லாவிட்டாலும், சமச்சீர் கல்வி முறையை செயல்வழியாக கற்றுத் தருகிறோம். குழந்தைகள் ஆர்வமுடன் கற்கின்றனர்.ஆசிரியை நாராயணி: செயல்வழிக் கல்வி முறையை குழந்தைகள் ஜாலியாக, "என்ஜாய்' செய்கின்றனர். இதனால் புதிது, புதிதான ஐடியாக்களை தாங்களாகவே உருவாக்குகின்றனர். இது குழந்தைகளுக்கு பலமான அடித்தளம் அமைத்து தரும். ஆனால் அனைத்து பாடங்களுக்கும் இந்த கல்வி முறை ஒத்து வருமா என்பதை போக போகத் தான் பார்க்க வேண்டும்.
தனியார் பள்ளி "கெட்டப்'பில் படிப்பும், சீருடையும்! நாகதர்ஷினி மற்றும் கலைவாணியின் தாய் கூறுகையில், "தனியார் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் பயின்று வந்த நிலையில், அரசு பள்ளிகளிலும் அதே போல், சிறப்பு பாட முறைகளான செயல்வழிக் கற்றல், ஹலோ இங்கிலீஷ், வகுப்பறை சூழல், மாண்டிசோரி முறையில் கல்வி, விளையாட்டு பொருட்களை பயன்படுத்தி கற்பிக்கும் முறை, பள்ளி கட்டணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசு பள்ளியிலேயே சேர்க்கலாம் என முடிவு செய்து, இந்தாண்டு அரசு பள்ளியில் சேர்த்துள்ளோம்."தனியார் பள்ளியில் முழுவதும் ஆங்கிலம் மட்டுமே பேசும் மொழியாக உள்ளதால், குழந்தைகள் தமிழ் பேசுவது மற்றும் படிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அரசு பள்ளியில் சேர்த்து மூன்று மாதமான நிலையில், தனியார் பள்ளிக்கும், அரசு பள்ளிக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. தனியார் பள்ளிகளை போன்றே சீருடை உள்ளதால் குழந்தைகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை' என்று கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||