மின்மினிகள் தங்கள் இணையைக் கவர்வதற்காகத்தான் மின்னுகின்றன. ஆண் மின்மினிக்கும், பெண் மின்மினிக்கும் இந்த வெளிச்சம் உண்டு. பெண் மின்மினிப் பூச்சியின் வெளிச்சம், ஆண் மின்மினியின் வெளிச்சத்தைவிட குறைந்த நேரம் ஒளிரக் கூடியதாக இருக்கும். மின்மினியின் வயிற்றுப் பகுதியின் பின்புறத்திலிருந்துதான் வெளிச்சம் வருகிறது. அதன் உடலிலுள்ள "லூஸிபெரோஸ், லூஸிபெரின்' எனும் ரசாயனப் பொருட்களின் செயல்பாட்டால்தான் வெளிச்சம் உண்டாகிறது. இந்த செயல்பாட்டிற்கு நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படும். இது வெளிச்சம் மட்டும்தான். சற்றும் வெப்பமாக இருக்காது. மின்மினிகளில் பல இனங்கள் இருக்கின்றன. ஒளிர்வதற்கும் அணைவதற்கும் இடையிலான இடைவெளி, ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். ஒரு மின்மினி தன் இனத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று இன்னொரு மின்மினி, இந்த ஒளிர்ந்தணையும் இடைவெளியை வைத்துத்தான் கண்டுபிடிக்கிறது.
சிலந்தி
சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன.
கங்காரு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்கு. இதன் குட்டிகள் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்துவிடுகின்றன. பாக்கி வளர்ச்சியெல்லாம் கங்காருவின் வயிற்றுப் பையில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். பிரசவ நேரத்தில் கங்காரு, குட்டி வெளியே வருகிற துளை முதல் வயிற்றின் மேல் பகுதிவரையான பாகத்தை நக்கும். இப்படி நக்கி நக்கி தன் உடல் ரோமத்தின் வழியே ஒரு பாதையை ஏற்படுத்தும். குட்டி இந்தப் பாதை வழியே ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத்தவிர மற்ற உணவை, செரிக்கக்கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி, அம்மாவின் பைக்குள்ளேயேதான் இருக்கும். குட்டியின் உடற்பகுதிகளெல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும். பிறகு எப்போதாவது நரியோ, கழுகோ, மற்ற விலங்குகளோ பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஏறி ஒளிந்துகொள்ளும்.
மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.
எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகத்தான் முள்ளம் பன்றிக்கு முட்கள் அமைந்துள்ளன. எதிரிகள் தாக்க வரும்போது முள்ளம் பன்றி முட்களையெல்லாம் நிமிர்த்திக்கொண்டு விறைப்புடன் நிற்கும். எதிரிகள் முட்களை சரியாகப் பார்க்கும்படி முதுகு காட்டிதான் நிற்கும். சில சமயம் முட்களை ஒன்றாக மெதுவாக அசைக்கும். இதைப் பார்த்தும் எதிரி பயந்தோடவில்லையென்றால், பின்புறமாகவே விரைந்து வந்து எதிரியின் உடலில் முட்களைச் செருகும். எவ்வளவு சக்தியுள்ள பெரிய மிருகமாக இருந்தாலும் முள்ளம் பன்றியின் முள் குத்தினால் பெரும் சிரமம்தான். முள்ளம் பன்றியால் தாக்கப்பட்ட விலங்கு சில சமயம் இறந்துவிடுவதும் உண்டு. விருப்பப்படி அசைக்க முடிகிற தளர்வான தசைகளில்தான் முட்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தசைகளை தளர்த்தியும் இறுக்கியும், முட்களைப் படிய வைக்கவோ உதிர்க்கவோ முள்ளம் பன்றிகளால் முடியும்.
முள்ளம் பன்றியால் குத்துப்பட்ட மிருகத்தின் உடலில் தைத்த முள்ளின் முனைகள் சிறிய கொக்கிகளைப்போல நிமிர்ந்து மடங்கி உட்சென்றுகொண்டிருக்கும். எதிரிகளிடமிருந்து ஓடியோ, ஒளிந்தோ, தப்பிக்க இயலாதவை முள்ளம் பன்றிகள். அதனால்தான் இயற்கை முட்களின் பாதுகாப்பை இவற்றிற்கு வழங்கியுள்ளது. முட்களற்ற பகுதி முள்ளம் பன்றியின் வயிறுதான். இது உடலில் மிகவும் மென்மையான பகுதி. எதிரிகள் இந்தப் பகுதியை பற்றிவிட்டால் முள்ளம் பன்றி வசமாகச் சிக்கிக் கொண்டுவிடும். எதிரிகளைக் கண்டால் சில சமயம் இவை உடலைச் சுறுட்டிக்கொண்டு பந்துபோலக் கிடக்கும். இந்த நிலையில், முட்களற்ற பகுதி வெளியே தெரியாது. ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் முள்ளம் பன்றிகள் வசிக்கின்றன.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||