உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் முடிவை முன்னரே அறிவித்த (?) ஆக்டோபஸ்சை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். ஆக்டோ என்ற லத்தீன் சொல்லுக்கு எட்டு என்று பொருள். பன்னெடுங்காலமாக கடல் பயணம் செய்பவர்களால் பேய் மீன் என்று பேசப்படும் எட்டு கால்களையுடைய அபூர்வ விநோதமான ஜீவராசியே ஆக்டோபஸ். மெல்லுடலிகள் குடும்பத்தைச் சேர்ந்த இவை தலைகாலிகள் என்ற வகுப்பைச் சேர்ந்தவை.
இதில் உலகம் முழுவதும் 160 வகைகள் இருக்கின்றன. இவற்றின் அறிவுத்திறன் மற்றும் அதிசய குணங்கள் குறித்து, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியக் காப்பகத்தின் கடல் உயிரியலாளர் ர. செந்தில்குமார் தெரிவித்தது.
ஒரு சில ஆக்டோபஸ் மட்டும் ஆழமற்ற கடல் பகுதியில் வசித்தாலும், பெரும்பாலானவை கடலில் மிக ஆழமான பகுதிகளில்தான் அதிகமாகவும் கூட்டம், கூட்டமாகவும் தனி சாம்ராஜ்யமே அமைத்துக்கொண்டு வசிக்கின்றன.
இந்த உயிரினத்தின் எட்டு கால்களில், ஒவ்வொரு காலிலும் இரண்டு வரிசையில் உறிஞ்சு குப்பிகளாகவும், அவை சுவை உணர்வுகளையும் கொண்டிருக்கும்.இந்த சுவை உணர்விகள் மூலமே, தனது உணவின் சுவை,நிறம் ஆகியனவற்றை இவை எளிதாக அறிந்துகொள்கின்றன. மனிதர்களின் கண்களுக்கு இணையாக ஆக்டோபஸின் கண்களும் இருக்கின்றன. அதாவது பார்க்கும் பிம்பத்தின் நிறம், வடிவம், தூரம் முதலியனவற்றை மிகச் சரியாகத் தெரிந்து கொள்கின்றன. தலை உருண்டையாகவும் அதனுள்ளே அனைத்து முக்கிய உறுப்புக்களையும் கொண்டதாகவும் இருக்கிறது.
இதன் மேல்தோல் மென்மையானதாகவும் அடிக்கடி தனது நிறத்தை பச்சோந்தி போல மாற்றிக் கொள்ளும் வசதியுடையதாகவும் இருக்கிறது. கூர்மையான பற்கள் இருக்கின்றன. இதன் மூளை விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறன் பெற்றது.
அதனையும் மீறி எதிரிகள் இதன் அருகே வந்துவிட்டால், மை போன்ற ஒரு திரவத்தை சுற்றுப்புறம் முழுவதும் பீய்ச்சி அடித்து, அந்த இடத்தையே கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசிய பகுதிபோல கருமையாக்கிவிட்டு, பாறைகளுக்கு இடையே ஒளிந்து ஆக்டோபஸ்கள் தப்பி விடுகின்றன.
உலகில் சில நாடுகளில் மட்டும், இதனையும் ஒரு செல்லப் பிராணிகளாகவே வளர்த்து வருகிறார்கள். பல கோடி ரூபாய் கொடுத்து அதை விலைக்கு வாங்கவும், பலர் தயாராக உள்ளனர்.
உலகக் கோப்பை சோதிடத்துக்குப் பிறகு ஒருபடி மேலே போய், ஸ்பெயின் அரசு அந்த ஆக்டோபஸ்க்கு கவுரவக் குடியுரிமையே வழங்கிவிட்டது.
சின்னஞ்சிறு மீன்கள்,நத்தைகள்,சிப்பிகள் இது போன்ற அசைவ அயிட்டங்கள்தான் இவற்றின் இரை. சில சமயங்களில் பெரிய ஆக்டோபஸ்கள் சிறிய ஆக்டோபஸ்சை கபளீகரம் செய்து விடுகின்றன. இரண்டு ஆண்டுகள்தான் இதன் ஆயுட்காலம் என்றாலும், ஒரே சமயத்தில் 200 முட்டைகள் வரை இடுகின்றன.
ஆண் ஆக்டோபஸ் தனது உயிரணுக்களை, அதன் காலில் அமைந்துள்ள சிறப்பு உறுப்பான ஹெக்டோ காட்டிலஸ் மூலமாக பெண்ஆக்டோபஸ் இனத்துடன் இனச்சேர்க்கை நடத்துகிறது.
ஏறக்குறைய 3 வாரங்கள் கழித்து, ஒவ்வொரு குஞ்சுகளாக வெளிவருகின்றன. மன்னார் வளைகுடா பகுதியில் ஆக்டோபஸ் தொடர்பான ஆராய்ச்சிகள் எதுவும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.
வடக்கு பசிபிக் ஆக்டோபஸ் உருவத்தில் பெரிதாகவும், 30 அடி வரை வளரக்கூடியதாகவும் உள்ளது. கலிபோர்னியா ஆக்டோபஸ் ஒரு இன்ச் மட்டுமே வளரும் மிகச்சிறிய உயிரினம்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||